தி.மு.க.வுடன் இடஒதுக்கீடு குறித்து மீண்டும் பேச்சு நடத்துவோம்: சு.திருநாவுக்கரசர்

299 0

201610130821247808_thirunavukkarasu-interview-we-will-talk-again-about_secvpfஉள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் போது, தி.மு.க.வுடன் மீண்டும் இடஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என சு.திருநாவுக்கரசர் கூறினார்.தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின், மாவட்ட தலைவர்கள் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கட்சியின் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, மாநில துணைத்தலைவர் எச்.வசந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில பொதுச் செயலாளர்கள் தணிகாசலம், சிரஞ்சீவி, மகிளா காங்கிரஸ் தேசிய செயலாளர் ஹசீனா சையத், எஸ்.சி. பிரிவு மாநில தலைவர் செல்வபெருந்தகை, எஸ்.சி பிரிவு மாநில அமைப்பாளர் தமிழ்செல்வன் மற்றும் மாவட்ட தலைவர்கள் வி.ஆர்.சிவராமன், ரங்கபாஷியம், கராத்தே தியாகராஜன், அசோகன் சாலமன், பாலையா உள்பட 56 மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மொத்தம் உள்ள 61 மாவட்ட தலைவர்களில் 5 பேர் மட்டுமே உடல்நிலை சரியின்மை, மற்றும் வேறு காரணங்களால் கூட்டத்திற்கு வர முடியவில்லை என கட்சி தலைமைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக திருச்சியில் நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்தும், இன்னும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் பெரும்பாலான மாவட்ட தலைவர்கள் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிக்கு தகுந்த, போதுமான இடங்களை ஒதுக்கீடு செய்தால், அக்கட்சியுடன் கூட்டணியை தொடருவோம், இல்லை என்றால் கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்து தேவைப்பட்டால் தனித்து கூட களம் காண்போம் என தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் தி.மு.க. கூட்டணியிலேயே தொடர வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கூட்டம் முடிவில் சு.திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-முதல்-அமைச்சர் மருத்துவமனையில் இருக்கும் சூழ்நிலையில் முக்கியமான பிரச்சினைகளான, காவிரி நதிநீர் பிரச்சினை, முல்லைப்பெரியாறு பிரச்சினை, விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அறிவிப்புக்கு ஆணை பிறப்பித்தல் மற்றும் பொதுத்துறை இலாகாக்களில் மாற்றங்களோ, அரசாணை பிறப்பித்தலோ அல்லது வெளியிடுவதோ இயலாமல் இருந்தது. அமைச்சரவை கூட்டமும் நடைபெறாமல் இருந்தது.

கவர்னர் வித்யாசாகர் முதல்-அமைச்சரை பார்த்துவிட்டு வந்த பிறகு, மூத்த அமைச்சர்களோடு, தலைமை செலாளர்களோடு, முதல்- அமைச்சரின் அனுமதியோடு அதில் ஒரு மாற்றம் தற்காலிக ஏற்பாடாக செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அமைச்சரவை கூட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்துவார் என்றும், முதல்-அமைச்சரின் இலாகாக்களை பன்னீர்செல்வம் நிர்வகிப்பார் என்றும், அரசியல் சட்டப்படி அறிவிப்புகளை கவர்னர் வெளியிட்டு இருக்கிறார்.

முதல்-அமைச்சரின் உடல்நிலை தேறி மீண்டும் பணிகளை தொடரும் வரை இந்த இடைக்கால ஏற்பாடு தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு எந்திரம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இடைக்கால ஏற்பாட்டை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது.

உள்ளாட்சி தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. 18-ந் தேதி உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வரவிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வரப்போகிறது என்று தெரியாது. எனவே உள்ளாட்சி தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட உடன், மீண்டும் இது குறித்து பேச முடிவு செய்து இருக்கிறோம்.

சென்ற முறை தி.மு.க.வுடன் இட ஒதுக்கீடு குறித்து பேசி வந்தோம். சில இடங்களில் பேச்சுவார்தை முழுமையாக வெற்றிகரமாக முடிவுற்றது. சில இடங்களில் பேச்சுவார்த்தை முழுமையாக முடிவடையவில்லை. சில இடங்களில் இரண்டு கட்சியினரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதில், வேட்புமனு வாபஸ் வாங்கும் வரை காலஅவகாசம் இருந்தது. தொடர்ந்து பேசி வந்தோம், அதற்குள் உயர் நீதிமன்ற வழக்குப்படி தேர்தல் ரத்தாகிவிட்டது. தேர்தல் அறிவிக்கப்படுகிற போது உள்ளாட்சி மன்ற தேர்தல் இடஒதுக்கீடு தொடர்பாக மீண்டும் தொடர்ந்து பேசுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டம் முடிவில், த.மா.கா. முன்னாள் மாநில செயலாளர் கடலூர் ஏ.எஸ்.சந்திரசேகர் தலைமையில் நூற்றுக்கணக்கானோர், சு.திருநாவுக்கரசர் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர்.

கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவராக சு.திருநாவுக்கரசரை நியமனம் செய்ததற்கு, கட்சியின் தலைவர் சோனியாகாந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்திக்கு நன்றி தெரிவித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காஷ்மீரில் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியும், தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தும், கர்நாடக மாநில கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரணம் வழங்க கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.