வடக்கின் கல்வித் தரத்தை முன்னேற்ற கல்வி ஆலோசனைக் குழு நியமனம்!

367 0

பாடசாலை மாணவர்களுக்கான தேசிய பரீட்சைப் பெறுபேறுகளில் வடக்கு மாகாணத்தை முன்னேற்றுவதற்காக கல்வி ஆலோசனைக் குழு ஒன்றை மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் நியமித்துள்ளார்.

அத்துடன், வடக்கு மாகாணத்தில் கணிதம், விஞ்ஞானம் உள்ளிட்ட பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களின் பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில் இணையவழிப் போதனை (E- Learning) திட்டத்தை அறிமுகம் செய்வது தொடர்பில் ஆராயப்படுகிறது என்று ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் வடக்கு மாகாணம் 7ஆவது இடத்தில் உள்ளோம். ஒரு காலத்தில் முதலிடத்தில் இருந்த நாம் இன்று 7 ஆவது இடத்துக்கு பின்தங்கியுள்ளோம்.

மேலும் க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறுவதில் வடக்கு மாகாணத்தில் முன்னேற்றம் உள்ளது. குறிப்பாக கணிதம், விஞ்ஞானத் துறையில் நாம் முதல்தரத்தில் உள்ளோம்.

எமது கல்வித் தரத்தை முதல்தரத்தில் பேணுவதற்காக கல்வி ஆலோசனைக் குழு நேற்று நியமிக்கப்பட்டது. பேராசிரியர்கள் மூவர், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்தக் குழுவில் உள்ளடங்குகின்றனர்.

இந்தக் குழுவுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்படும். அத்துடன், குழுவின் பணிகள் – அதிகாரங்கள் தொடர்பில் விதிக்கோவை ஒன்றும் வழங்கப்படும்.

வடக்கு மாகாணத்தில் கல்வித்துறைக்கு எந்தத் திட்டம் வந்தாலும் இந்தக் குழுவின் ஊடாக ஆலோசனைக்குச் சென்று அதன் பரிந்துரைக்கமையவே நடைமுறைப்படுத்தப்படும்.

இதன்மூலம் வடக்கு மாகாணத்தில் வரும் 5-10 வருடங்களில் தரமானதும் முழு அளவிலானதுமான கல்வியை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.

வடக்கு மாகாணத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளன. கணிதம், விஞ்ஞானம் உள்ளிட்ட பாடங்களை தமிழில் போதிப்பதற்கு ஆசிரியர்கள் தேவை. அதனை ஈடு செய்யும் வகையில் மேற்கு நாடுகளில் உள்ளது போன்று இணைய வழி போதனை (E- learning) தெரிவு செய்ய முடியும்.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். அது பொருத்தமானதாக அமைந்தால் வரும் ஓகஸ்ட் மாதமளவில் இணைய வழி போதனை நடைமுறைத்தப்படுத்தப்படும்.

தற்போதும் சில பாடசாலைகள் அதனை அறிமுகப்படுத்தியுள்ளன. அவை பரீட்சாத்த நிலையிலேயே உள்ளன. இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டால் வடக்கு மாகாணத்தின் கல்வித் தரத்தை மேலும் உயர்த்த முடியும் என்றார்.