தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்: பி.ஆர். பாண்டியன்

313 0

201610130952397404_pr-pandian-interview-should-declare-drought-affect-state-of_secvpfதமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறினார்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மறைமுகமாக உள் பாசன முறையை அமல்படுத்தி கிளை ஆறு ஒன்றுக்கு 1½ நாட்கள் மட்டும் பகிர்ந்தளிக்கப்படுவதால் நேரடி விதைப்பு செய்த நிலங்களுக்கு தண்ணீர் சென்றடையவில்லை.

பாசன மேலாண்மையை ஒருங்கிணைக்கவும், விளைநிலங்களுக்கு தண்ணீர் சென்றடைவதை உறுதிப்படுத்திடவும் பொதுப்பணித்துறை அமைச்சர், நெருக்கடியான காலகட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் பார்வையிட்டு ஆய்வு செய்து தீர்வு காண்பது வழக்கமாக இருந்தாலும் இந்த ஆண்டு அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்டா பகுதிகளை பார்வையிடாமலும், தூர்வாரும் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும் புறக்கணித்தது வேதனை அளிக்கிறது.

மிகப்பெரிய பொருளாதார இழப்பை விவசாயிகள் சந்தித்துள்ளனர். எப்படி வாழ்க்கை நடத்துவது என்று தெரியாமல் விவசாயிகள் பரிதவிக்கின்றனர். இனி எந்த சூழ்நிலையிலும் சம்பா சாகுபடி மேற்கொள்ள இயலாது என்பதோடு, இழப்பிற்கு பொதுப்பணித்துறையே முழு பொறுப்பேற்க வேண்டும்.

வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டால் சாகுபடி பணிகளை மேற்கொள்ள இயலாது. எனவே தமிழக அரசு தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து நிவாரண பணிகளை அவசர கால நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு பி.ஆர். பாண்டியன் கூறினார்.