குண்டுதாரியான ஸஹரான் தன்னை அரசியல் இருந்து ஒதுக்குவதற்கு இரவு, பகலாக பாடுபட்ட நபர் என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து மேற்படி தகவலை அவர் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் கூறுகையில்,
தேசிய தௌஹீத் ஜமாத்திற்கும், அதற்கு பொறுப்பாக இருந்த குண்டுதாரி ஸஹரானுக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாக ஒரு புகைப்படத்தையும் இட்டு செய்திகள் பிரசுரிக்கப்படுகின்றன.
குறிப்பாக கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காத்தான்குடி பிரதேசத்தில் போட்டியிட்ட சகல வேட்பாளர்களையும் அவர்கள் சந்திப்பிற்கு அழைத்திருந்தார்கள்.
அந்த சந்திப்பிற்கு நானும் போயிருந்தேன். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து தான் மேற்படி செய்தியை பிரசுரிக்கிறார்கள்.
அந்த தேர்தலிலே போட்டியிட்ட ஏனைய கட்சிகளின் முஸ்லிம் வேட்பாளர்களும் அங்கு சமூகமளித்திருந்தார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலிலே எந்தவொரு அவர்கள் எனக்கு ஆதரவளித்தது கிடையாது.
என்னுடைய அரசியல் வாழ்க்கையில் குறித்த நபரே அவரை சார்ந்தவர்களோ அல்லது இன்று வரை கைது செய்யப்பட்டு குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டுள்ள யாரும் எனக்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் கிடையாது.
குறிப்பாக இந்த ஸஹரான் என்பவர் என்னை தோற்கடிப்பதில் மிக மோசமாக செயற்பட்ட ஒருவர். என்னை தேர்தலிலே தோற்கடித்து அரசியலில் இருந்து இல்லாமல் செய்வதற்கு வேகமாக செயற்பட்ட ஒருவர்.
ஒரு சுயேட்சை குழுவின் பெயரை பயன்படுத்தி மேடைகளை போட்டு எனக்கெதிராக பிரச்சாரம் செய்த ஒருவர்.
நான் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவன். எனக்கு மக்கள் வாக்களிக்க கூடாது. எனக்கு வாக்களிப்பது ஹராம் என்று மேடை மேடையாக பிரச்சாரம் செய்து என்னை தோற்கடித்தவர்கள்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலிலே நான் வெறும் 51 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டேன். உண்மைக்கு புறம்பான பொய்ப் பிரச்சாரங்களை செய்து கிட்டத்தட்ட 2000 வாக்குகளை இல்லாமலாக்கினார்கள்.
அதனால் நான் தோற்கடிக்கப்பட்டேன். தோற்கடிக்கப்பட்ட என்னை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு நியமித்தார்.
அந்த தேசிய பட்டியல் நியமனம் வழங்கப்பட்டவுடன் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தையே செய்தார்கள் இந்த ஸஹரான் தலைமையிலான குழுவினர்.
இவர்களில் சிலர் கொழும்புக்கு சென்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
என்னை அரசியல் இருந்து ஒதுக்குவதற்கு இரவு, பகலாக முழுமையாக பாடுபட்ட ஒருவர் தான் இன்று குண்டுதாரியாக மாறி உயிரிழந்துள்ள ஸஹரான் என குறிப்பிட்டுள்ளார்.