தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை இல்லை- கே.எஸ்.அழகிரி

300 0

தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பேடி வழக்கில் ஐகோர்ட்டு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களின் பிரச்சனைகளில் தலையிட்டு தீர்க்க முடியும். மக்களால் தேர்ந்து எடுக்கப்படாத அதிகாரிகள், கவர்னர்கள் அரசின் செயல்பாடுகளில் தலையிடக்கூடாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்த தீர்ப்பு கிரண்பேடிக்கும், மத்திய உள்துறைக்கும் எதிரான தீர்ப்பு அல்ல. பிரதமர் மோடிக்கு எதிரான தீர்ப்பு. ஜனநாயகத்தை நீதிமன்றங்கள் தான் நிலை நிறுத்த முடியும் என்பதை காட்டி உள்ளது. தேர்தல் ஆணையம் மீது நம்பகத்தன்மை குறைந்து வருவதை பல முறை சொல்லி உள்ளேன். நம்பகத்தன்மையை தேர்தல் ஆணையம் இழக்கக்கூடாது. வாரணாசியில் மோடி வேட்புமனு தாக்கல் செய்தபோது, 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்றன. தேர்தல் ஆணையம் இதனை கவனிக்கவில்லை. வாரணாசியில் என்ன நடந்ததோ அது தான் தமிழகத்திலும் நடக்கிறது. தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை. சாதி, மதத்தின் பெயரால் மக்களிடம் பிரிவினை வரக்கூடாது. பிரிவினை வர அனுமதிக்கவும் கூடாது. இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.