போலந்து தேசிய அருங்காட்சியகத்தில் புதிய இயக்குனரான பதவியேற்றுள்ள ஜெர்சி மிசியோலெக் அங்குள்ள வாழைப்பழ ஓவியத்தை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போலந்து நாட்டின் தலைநகர் வார்சாவில் தேசிய அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. இங்கு கடந்த 1973-ம் ஆண்டு நடாலியா எல்எல், என்கிற பெண் ஓவியரால் வரையப்பட்ட ஓவியம் ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியம், பெண் ஒருவர் 12 விதமாக வாழைப்பழத்தை சாப்பிடுவது போன்று அமைந்திருக்கும் .
இந்த நிலையில், அண்மையில் இந்த அருங்காட்சியகத்தின் புதிய இயக்குனராக பொறுப்பு ஏற்றுக்கொண்ட ஜெர்சி மிசியோலெக் என்பவர், அருங்காட்சியகத்தை மறுசீரமைக்க நடவடிக்கை எடுத்தார். அப்போது, வாழைப்பழ ஓவியம், இளைஞர்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் இருப்பதாக கூறி அதனை அருங்காட்சியகத்தில் இருந்து அகற்றினார்.
இந்த விவகாரம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்நாட்டை சேர்ந்த பிரபல ஓவியர்கள், எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் அருங்காட்சியக இயக்குனரின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அவர்கள் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக வாழைப் பழம் சாப்பிடுவது போன்று ‘செல்பி’ எடுத்து ‘பேஸ்புக்’, ‘டுவிட்டர்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் அருங்காட்சியகத்தின் முன்பாக திரண்டு வாழைப்பழம் சாப்பிடும் போராட்டம் நடத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.