அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 4 பேர் படுகாயமுற்றனர். அமெரிக்காவில் உள்ள வட கரோலினா பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை 6 மணி அளவில் இந்த ஆண்டிற்கான கடைசி வகுப்புகள் நடந்து முடிந்தன. வகுப்புகள் முடிந்து வெளியே மாணவர்கள் வரும்போது திடீரென ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை அறிந்த பல்கலைக்கழகத்தின் அவசர மேலாண்மை அலுவலகம் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘உடனடியாக ஓடுங்கள், மறைந்துக் கொள்ளுங்கள், பாதுகாப்பாக இருங்கள்’ என பதிவிட்டு அனைத்து மாணவர்களையும் எச்சரித்தது.
இதையடுத்து பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமுற்ற 4 பேரை மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்களுள் 2 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கண்காணிப்பு கேமரா மூலம் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் அடையாளம் காணப்பட்டார். அவர் அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வரலாற்றுப்பாடப்பிரிவு மாணவர் என கண்டறியப்பட்டுள்ளது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2017ம் ஆண்டில் அமெரிக்காவில் மட்டும் மொத்தம் 40,000 பேர் துப்பாக்கிக்கு பலியாகியுள்ளனர். இவர்களுள் மூன்றில் இரண்டு சதவீதம் பேர் துப்பாக்கியால் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.