3 எம்.எல்.ஏ.க்களுடன் சேர்த்து தனக்கு ஏன் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பவில்லை என தனக்கு தெரியவில்லை என்று புதுக்கோட்டையில் கருணாஸ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:
3 எம்.எல்.ஏ.க்கள் மீது அரசு தலைமை கொறடா நடவடிக்கை எடுக்கக்கோரி சபாநாயகருக்கு பரிந்துரை செய்துள்ளார். இது தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே தற்போது உள்ள அ.தி.மு.க. அரசின் ஐயப்பாட்டை காட்டுகிறது. தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழக மக்களுக்கு இந்த நடவடிக்கை வெளிச்சத்திற்கு வரும்.
எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது அரசியல் காரணம் தான். அரசு கொறடா கொடுத்து உள்ள குற்றச்சாட்டுகளும், அதற்கு 3 எம்.எல்.ஏ.க்கள் கொடுத்து உள்ள தன்னிலை விளக்கமும் முரண்பாடாக உள்ளது. அந்த 3 எம்.எல்.ஏ.க்களுடன் சேர்த்து எனக்கு ஏன் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பவில்லை என எனக்கு தெரியவில்லை.
ஆனால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் எனக்கு அனுப்பி இருந்தால் நான் என்ன செய்வேன் என்று அவர்களுக்கே தெரியும். அதனால் தான் அவர்கள் எனக்கு அனுப்பவில்லை.
வரக்கூடிய தேர்தலில் அ.தி.மு.க. வாக்கு வங்கி சரிவை சந்திக்கும் என்றால், அவர்கள் வைத்து உள்ள பா.ஜ.க., தே.மு.தி.க., பா.ம.க. ஆகியவற்றுடன் ஏற்பட்ட கூட்டணியே காரணம். சட்டமன்ற இடைத்தேர்தலின் முடிவு வெளியான பிறகு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அப்போது உள்ள சூழலுக்கு ஏற்ப நான் முடிவெடுப்பேன்.
மத்திய அரசு இந்த தேர்தலை உற்று நோக்கி கொண்டு உள்ளது. நடந்து முடிந்த தேர்தல் ஜனநாயக தேர்தல் அல்ல. பணநாயகத்தின் தேர்தல். இதில் கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஊராட்சி தலைவர்களுக்கு உள்ள அதிகாரம் கூட எம்.எல்.ஏ.க்களுக்கு கிடையாது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமித்திருப்பது என்பது சிறப்பான செயல்பாடு. அதில் என்னென்ன குளறுபடி நடந்துள்ளது என்பது எனக்கு தெரியும்.
நடக்க உள்ள 4 தொகுதி இடைத்தேர்தலுக்கு நான் யாருக்கு ஆதரவு கொடுத்தாலும், எனக்கு அது பிரச்சனையாகத்தான் முடியும். அதனால் யாருக்கும் ஆதரவு இல்லை.
தேர்தலில் அமைதியாக இருக்க விரும்புகிறேன். தற்போது உள்ள தேர்தல் ஆணையம் மத்திய, மாநில அரசுகளின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.