சபாநாயகர் நோட்டீஸ் கிடைத்ததும் சட்ட ரீதியாக சந்திப்பேன்- கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.பிரபு

281 0

சபாநாயகர் தனபாலிடமிருந்து நோட்டீஸ் கிடைத்ததும் சட்ட ரீதியாக சந்திப்பேன் என்று கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.பிரபு தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகியோர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.

அவருக்கு ஆதரவு அளித்துவரும் 3 எம்.எல்.ஏ.க்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் சபாநாயகர் தனபாலை சந்தித்து மனு கொடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் கலைச்செல்வன், பிரபு, ரத்தினசபாபதி ஆகியோருக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் 3 பேரும் 7 நாட்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

சபாநாயகர் தனபாலிடமிருந்து எனக்கு கடிதம் எதுவும் வரவில்லை. அப்படி கடிதம் வந்தால் அதனை சட்ட ரீதியாக சந்திக்க தயாராக இருக்கிறேன். எந்த அடிப்படையில் என்னை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என கேட்பேன்.

இதுவரை நான் அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக செயல்படவில்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தான் நான் ஓட்டு அளித்தேன். நான் ஓட்டு அளித்ததால் தான் அவர் முதல்-அமைச்சராக இருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓட்டளித்த பன்னீர் செல்வம் உள்பட 11 பேரை இதுவரை ஏன் தகுதி நீக்கம் செய்யவில்லை. அதுபோல் ஆட்சிக்கு எதிராக செயல்பட்டு வரும் எம்.எல்.ஏ.க்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோருக்கு ஏன் தகுதி நீக்கம் கடிதம் அனுப்பப்படவில்லை.

தற்போது நடந்து முடிந்துள்ள இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிபெறுவது கடினம். இதன் காரணமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்ற அச்சத்தில் உள்ளனர்.

மேலும் நான் அவரை எதிர்த்து ஓட்டளிப்பேன் என்ற பயத்தில் உள்ளனர். ஆனால் அவர்கள் நினைப்பதுபோல் சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் வரும்போது ஆட்சிக்கு ஆதரவாகத்தான் நான் ஓட்டளிப்பேன். எனவே அவர்கள் அச்சப்பட தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

விருத்தாசலம் தொகுதி கலைச்செல்வன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

சபாநாயகர் அனுப்பியதாக கூறும் நோட்டீஸ் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. அவ்வாறு நோட்டீஸ் கிடைத்தால் சபாநாயகரை நேரில் சந்தித்து பதில் கொடுப்பேன். நான் தீவிர அ.தி.மு.க. ஆதரவாளர். சட்டமன்றத்திலும் அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டு வருகிறேன்.

அனைத்து நிகழ்வுகளிலும் ஆட்சிக்கு ஆதரவாக தான் உள்ளோம். இனிமேலும் இருப்போம். 11 எம்.எல்.ஏ.க்கள் இந்த அரசை கலைப்பதற்கு வாக்களித்தனர். குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம், சண்முகநாதன், செம்மலை உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் ஆட்சியை கலைப்பதற்காக ஓட்டுப்போட்டனர். அவர்களுக்கெல்லாம் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பவில்லை.

ஆட்சியைக் காப்பாற்ற ஓட்டுப்போட்ட எங்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதாக கூறி வருகின்றனர். சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தபோது அவருக்கு ஆதரவாக ஓட்டு போட்டோம். எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதாக கூறியது புரியாத புதிராக உள்ளது. இது ஜனநாயக படுகொலை ஆகும்.

ஜெயலலிதாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. நான். இதுவரை ஜெயலலிதாவின் விசுவாசியாகத் தான் உள்ளேன். ஜெயலலிதாவின் ஆத்மா இவர்களுக்கு பதில் சொல்லும். கடிதம் வழங்குபவர்களுக்கு ஜெயலலிதாவின் ஆத்மா சரியான பாடத்தைப் புகட்டும். ஜெயலலிதாவின் ஆத்மா இவர்களை மன்னிக்காது, என்பதில் மாற்று கருத்து இல்லை.

நோட்டீஸ் மெயிலில் கூட இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. அவ்வாறு வந்தால் நோட்டீசில் என்ன கேட்கப்பட்டுள்ளது என அறிந்து அதற்குப்பிறகு தான் கருத்து கூற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.