வவுணதீவு பொலிசார் கொலை : சஹ்ரானின் இரு சகாக்கள் தடுத்துவைத்து விசாரிப்பு

268 0

மட்டக்களப்பு வவுணதீவில் இரு பொலிசாரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சஹ்ரானின் சகாக்களான காத்தான்குடியைச் சேர்ந்த இருவரில் ஒருவர் கடந்த 27 ஆம் திகதி காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டதுடன் ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட சஹ்ரானின் மற்றுமொரு சகாவான சாரதியிடமிருந்து 7 கைத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி மாரசிங்க தெரிவித்தார்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி நள்ளிரவு  மட்டக்களப்பு வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகில் கடமையில் இருந்த பொலிசார் இருவரை இனம் தெரியாதோரால் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் படுகொலை செய்துவிட்டு அவர்களிடமிருந்த இரு கைதுப்பாக்கிகளை எடுத்துச் சென்றனர்.

இந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்பில் முன்னாள் போராளிகள் இருவரை கைதுசெய்ததுடன் அவர்களை தடுத்துவைத்துள்ளதுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தொடக்கம் முன்னாள் போராளிகள் பொதுமக்கள் என நூற்றுக்கு மேற்பட்டோருடம் சி.ஐ.டி.யினர் கடந்த 6 மாதங்களாக விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலையடுத்து இத்தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டுவந்தனர்.

இந்த நிலையில் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கடந்த 26 ஆம் திகதி விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி மாரசிங்க தலைமையிலான விசேட அதிரடிப்படையினர் மட்டக்களக்கு காத்தான்குடியில் வைத்து  ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின்  சஹ்ரானின்  சாரதியான 54 வயதுடைய  முகமது சரீப் ஆதம்லெப்பையை கைதுசெய்து மேற்கொண்ட விசாரனையின் போது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் முதல் தாக்குதல்  வவுணதீவில் இரு பொலிசார் மீதான தாக்குதல் என தெரியவந்தது.

இத் தாக்குதலில் தொடர்புடைய  புதிய காத்தான்குடி 2 ஆம் பிரிவு மீன் சந்தை வீதியைச் சேர்ந்த 34 வயதுடைய அப்துல் மனாப் ஷார்குஸ், புதிய காத்தான்குடி எம்.எம்.ஜே. வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய  கம்சா முகைதீன் முகமது இம்ரான் ஆகிய இருவரையும் 27 ஆம் திகதி காத்தான்குடியில் வைத்து கைது செய்தனர்.

இவ் பொலிசார் மீது தாக்குதலை நடத்த இரு மோட்டார் சைக்கிளில் வந்ததாகவும் பொலிசாரை கைதுப்பாக்கியல் சுட்டு கொலை செய்துவிட்டு அவர்களிடமிருந்த இரு கைத்துப்பாக்கிகளை எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அவற்றில் ஒன்றை நிந்தவூர் பிரதேசத்திலிருந்தும் மற்றைய கைதுப்பாக்கியை  புத்தளம் பிரதேசத்திலிருந்தும் கைது செய்யப்பட்ட  சஹ்ரானின் சாரதியின் தகவலுக்கமைய மீட்கப்பட்டதுடன் புத்தளத்தில் பொலிசாரின் கைதுப்பாக்கியுடன் 5 பிஸ்டல்களை சி.ஐ.டி யினர் மீட்டுள்ளதாகவும் பொலிசாரை கொலை செய்ய பயன்படுத்திய ஒரு மோட்டார் சைக்கிளை மட்டு. தேவாலய குண்டு வெடிப்பு பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் இச் சம்பவத்துடன் டதொடர்புடைய ஒருவர் வெளிநாடு ஒன்றிற்கு தப்பி ஓடியுள்ளதாகவும் அந்த நாட்டுக்கு குறித்த நபர் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்  அவர்  பொலிஸார் தெரிவித்தனர்.