தற்கொலை குண்டுதாரிகள் கல்முனையில் கடை ஒன்றில் ஆடைவாங்க செல்வதற்காக பயன்படுத்திய வான் சாரதி மற்றும் வானை வாடகைக்கு கொடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) மட்டு. மாவட்ட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த வானையும் மீட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.எம்.டி.கீத்த வத்துர தெரிவித்தார்.
அத்தோடு கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாககவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ்.சமந்த தலைமையிலான புலனாய்வு பிரிவினர் நேற்று முன்தினம் இரவு தற்கொலை குண்டுதாரிகள் ஆடைவாங்க பயன்படுத்திய வானை கல்லடி பிரதேசத்தில் வைத்து மீட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து வானை ஓட்டிச்சென்ற வான் சாரதியான காத்தான்குடி 4ஆம் பிரிவு 3ஆம் பழைய வீதியைச் சேர்ந்த 54 வயதுடைய அப்துல் ஹமீட் மொஹோமட் றிபாஸ் என்பவரை காத்தான்குடியில் கைது செய்தனர்.
அதனை தொடர்ந்து வானை வாடகைக்கு கொடுத்த கல்லடி மற்றும் கூளாவடி பிரதேசத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர்.இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட வான் சாரதியான றிபாசிடம் தற்கொலை குண்டுதாரிகள் வான் ஒன்றை வாடைகைக்கு எடுத்துவரும்படி தெரிவிக்கப்பட்டதையடுத்து றிபாஸ் மட்டக்களப்பு கூளாவடி பிரதேசத்தைச் சேர்ந்த யூட் என்ற வான் சாரதியிடம் வான் ஒன்று வாடகைக்கு தேவை என தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் யூட் கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த எம்.தனுஷன் என்பவரிடம் வான் ஒன்று தேவை என தெரிவித்ததையடுத்து தனுஷன் சோபனா என்பவரின் வானை வாடைகைக்கு எடுத்து யூட்டிடம் வழங்கியுள்ளார்.
இதனை யூட் றிபாசிடம் வாடகைக்கு வழங்கியுள்ளார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இந்த வானில் தற்கொலை குண்டுதாரிகளான 3 பேரையும் குழந்தைகளையும் ஏற்றிச்சென்று கல்முனை பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றில் வெள்ளை உடுப்புக்களை கொள்வனவு செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இதனையடுத்தே குறித்த மூவரையும் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.