முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத் தளபதிகளை ஊழல், மோசடி விசாரணைகளுக்கு உட்படுத்துவது தொடர்பில் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
சி.ஐ.டி, எப்.சி.ஐ.டி மற்றும் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப செயற்படுமானால் அவற்றுக்கு எதிராக கடும் தீர்மானங்களையும் எடுக்க தான் பின்நிற்கப் போவதில்லையெனவும் அவர் சூளுரைத்துள்ளார்.
நேற்றுமுன்தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சரவைக்கிடையிலான சந்திப்பு நடைபெற்றபோது தான் இதை அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளதாக மைத்திரிபால சிறிசேன இராணுவத்தினர் முன்னிலையில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,கடந்த ஆண்டு முன்னாள் இராணுத் தளபதிகள் மூவரை விசாரணையொன்றிற்காக அழைத்திருந்தனர். நான் அப்போது யுத்தத்தை வழிநடத்திய படைத் தளபதிகளை விசாரணைகளுக்காக அழைத்ததற்காக நான் எனது அதிருப்தியையும், கண்டத்தையும் வெளியிட்டிருந்தேன். அதேபோல் கடந்த மாதம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதிகள் மூவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றிருந்தனர். இந்த செயலுக்கு நான் கடும் எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கின்றேன்.
குறிப்பாக யுத்தத்தை மேற்கொண்ட கடற்படைத் தளபதிகள் மூவரை நீதிமன்றத்தில் நிறுத்தியது தொடர்பில் எனது கடும் அதிருப்தியையும், கண்டனத்தையும் பதிவுசெய்துகொள்கின்றேன். இ்த நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்ததற்கான நோக்கமொன்று இருக்கின்றது. அதற்கான கொள்கைகளும் இருக்கின்றன. இந்த சுயாதீன ஆணைக்குழுக்களில் உள்ளவர்களும் தமக்குரிய விடயதானங்கள் என்ன என்பது தொடர்பில் நன்கு அறிந்துவைத்திருக்க வேண்டும்.
அரசொன்றை நிர்வகிப்பது, தேசிய பாதுகாப்பு, மற்றும் இராணுவ முகாமைத்துவம், இராணுவ நிர்வாகம் தொடர்பில் எந்தவித அறிவும் இல்லாத தரப்பினர், இந்த விடயங்கள் தொடர்பில் ஆழமாக சிந்தித்து செயற்பட முடியாதவர்கள் மூலைகளுக்குள் இருந்துகொண்டு பிழையாக செயற்படுவது தெரிகின்றது.
பாதுகாப்பு அமைச்சின் செயற்பாடுகள் மற்றும் அவன்ட் கார்ட் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டுமானால் அவை தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஒரு முறை இருக்கின்றது. அவற்றுக்கு பின்பற்ற வேண்டிய வரைமுறைகள் இருக்கின்றன. சட்டங்கள் இருக்கின்றன. அதேவேளை இந்த விடையங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவோம், நாட்டின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்த வேண்டிய கடமையும் இருக்கின்றது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை தெளிவுபடுத்த வேண்டும். இந்த இடத்தில் சுயாதீன விசாரணை ஆணைக்குழுக்கள் அவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என சில வாதிடலாம். ஆனால் இந்த சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான ஆணையாளரை மாத்திரமே அரசியல் சாசன சபை நியமித்திருக்கின்றது. ஆனால் அவற்றுக்கான செயலாளர் நாயகம் மற்றும் பணிப்பாளர் நாயகத்தை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே வழங்கப்பட்டுள்ளது.
ஆட்சியை கொண்டு நடத்துவதற்காகவே அரசியல் சாசனத்தில் அரசியல் சாசன சபைக்கும், ஜனாதிபதிக்கும் இவ்வாறு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றன. குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில் இராணுவப் புலனாய்வு அதிகாரிகளை கைதுசெய்து நீண்டகாலமாக சிறையில் அடைத்துவைத்துள்ளதற்கும் கடும் எதிர்ப்பை வெளியிட்ட மைத்திரிபால சிறிசேன, குற்றச்சாட்டுக்கள் இல்லை என்றால் அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
எனினும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு 10, 15 வருடங்களாக தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு அல்லது வழக்குத் தொடருமாறு பல்வேறு போராட்டங்களை நடாத்தி வருகின்றனர். இதற்கு இதுவரையும் எந்தவொரு தீர்வையும் மைத்திரி அரசாங்கம் முன்வைக்கவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.