தயாசிறியின் குற்றச்சாட்டு அனைத்தும் அப்பட்டமான பொய்யாகும்-ஹலீம்

296 0

சிங்கள மக்களை என்னில் இருந்து தூரப்படுத்தவே தயாசிறி ஜயசேகர பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருவதாக தபால் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் ஏ,எச்.எம்.ஹலீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர கட்சி தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது, அமைச்சர் ஹலீம் நாடுமுழுவதும் 400 தெளஹீத் பள்ளிவாசல்களை பதிவுசெய்துள்ளதாக தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் தபால் அமைச்சில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்த அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்த 2015 ஆம் ஆண்டுமுதல் முஸ்லிம் சமய அமைச்சராக நான் செயற்படுகின்றேன். இந்த காலப்பகுதியில் 400 தெளஹீத் பள்ளிவாசல்களை அமைக்க நான் அனுமதி அளித்ததாகவும் அதில் 50 பள்ளிவாசல்கள் எனது கண்டி மாவட்டத்தில் அமைக்க அனுமதி வழங்கி இருப்பதாகவும் தயாசிறி ஜயசேகர குற்றம் சாட்டியிருந்தார். அவரின் இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அப்பட்டமான பொய்யாகும். 

அத்துடன் இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் கண்டியில்  எனது தொகுதியான ஹரிஸ்பத்துவ சிங்கள மக்களை வெறுப்படையச்சையும் திட்டத்திலே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. 

அத்துடன் நாட்டில் மொத்தம் இரண்டாயிரத்து 599 பதிவு செய்யப்பட்ட பள்ளவாசல்கள் இருக்கின்றன. அதேபோன்று ஆயிரத்தி 775 மத்தரசாக்களும் 317 அரபுக்கல்லூரிகளும் இருக்கின்றன. கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 282 பள்ளிவாசல்கள் இருக்கின்றன. அதில் 94 பள்ளிவாசல்கள் எனது காலத்தில் பதிவு செய்திருகின்றேன். கண்டியில் இடம்பெற்ற வன்முறையில் அதிகமான பள்ளிவாசல்கள் பாதிக்கப்பட்டன. அப்போது நீதிமன்ற நடவடிக்கைகளினூடாக அவற்றுக்கு நஷ்டயீடு பெற நடவடிக்கை எடுத்தபோது, அதில் அதிகமான பள்ளிவாசல்கள் பதிவு செய்திருக்கவில்லை. அதனால் எமக்கு அதில் பாதிப்பு ஏற்பட்டது. 

அதனால்தான் நான் நாட்டில் இருக்கும் பதிவு செய்யாத அனைத்து பள்ளிவாசல்களையும் வக்பு சபையில் பதிவு செய்துகொள்ளுமாறு நான் அறிவிப்பு செய்தேன். அதன் பிரகாரமே கண்டியில் 94 பள்ளவாசல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவ்வாறு இல்லாமல் இவை அனைத்தும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல்கள் அல்ல. ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டவையாகும். பொதுவாக புதிதாக பள்ளிவாசல்களை பதிவு செய்வதாக இருந்தால் அது நிர்மாணிக்கப்பட்டு 6மாதங்கள் வரை செல்லும். அந்த காலப்பகுதியில் குறித்த பள்ளிவாசல் பதிவு செய்வதற்கான தகுதிகள் தொடர்பில் வக்கு சபையினால் ஆராயப்படும் என்றார்.