இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகளை காரணம் காட்டி தேர்தல்களை ஒத்திவைப்பதானது ஜனநாயகத்தைப் படுகொலை செய்வதற்குச் சமம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் குண்டு வெடிப்புக்கள் மற்றும் படுகொலைகளுக்கு மத்தியில் தேர்தல்கள் நடத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டிய தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, கடந்த வருடங்களாக ஒத்திவைக்கப்பட்டும், பதவி நாட்களை நீடிப்பு செய்தும் வருகின்ற தேர்தல்களை உடன் நடத்தியாக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சிங்கள வாரப் பத்திரிகை ஒன்றின் ஒருவருடப் பூர்த்தியினை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.