நுவரெலியாவில் தொடரும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்கள்(காணொளி)

458 0

 

up-countryநுவரெலியா மாவட்டத்தில் ஹற்றன் எபோட்சிலி தோட்டம் மொன்டிபெயார் பிரிவில் 1000 ரூபாவை வழங்க கோரி 200 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தோட்டத்தில் டயர்களை எரித்து, கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான ஆதரவை தெரிவித்து போராடும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு நன்றி, கூட்டு ஒப்பந்தத்தை இரத்து செய் போன்ற பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியதுடன் தாம் மாதாந்தம் தொழிற்சங்கங்களுக்கு வழங்கும் சந்தாப்பணத்தை தற்காலிகமாக நிறுத்தி விட்டோம் என்று கோஷங்கள் மூலம் தமது ஆதங்கத்தினை வெளிப்படுத்தினர். தோட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்க வேறுபாடுகள் இன்றி நடு வீதியில் இறங்கி போராட்டங்களை முன்னெடுத்தனர்.

தோட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்க வேறுபாடுகள் இன்றி நடு வீதியில் இறங்கி போராட்டங்களை முன்னெடுத்ததுடன், உருவ பொம்மைகளை எரித்ததுடன், டயர்களையும் வீதியில் எரித்து தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தியதுடன் வேலை நிறுத்தபோராட்டத்திலும் ஈடுப்பட்டனர்.

தோட்ட தொழிலாளர்களின் சம்பள கூட்டு ஒப்பந்தம் முடிவடைந்து 18 மாதங்கள் கடந்த நிலையில் கூட்டு ஓப்பந்ததில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் மற்றும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் பல சுற்றுப்பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.

எனினும் தொழிற்சங்கம் முன்வைத்த 1000 ரூபாவை கம்பனிகள் வழங்க முடியாது என்று மறுப்பு தெரிவித்தன.

இந்நிலையில் பெருந்தோட்ட கம்பனி 730 ரூபா தருவதாக முன்வந்தாலும், தொழிற்சங்கம் பெற்றுத்தருவதாக கூறிய 1000 ரூபா கட்டாயம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என தொடர்ச்சியாக மலையக பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

தோட்ட தொழிலாளர்கள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் கொழும்பு நகரம் மற்றும் யாழ் மக்களும் ஆர்ப்பாட்டங்களை நடாத்தி தங்களின் ஆதரவினை வழங்கிவருகின்றமை குறிப்பிடதக்கதாகும்.

இத்தோட்ட தொழிலாளர்கள் அங்கவகிக்கும் கட்சிகளான மலையக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கம், அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட கட்சிகளுக்கு மாதாந்தம் சம்பளத்தில் சந்தாபணத்தினை தற்காலிகமாக அறவிட வேண்டாம் என தொழிலாளர்கள் குறித்த தோட்ட அதிகாரியிடம் கையொப்பமிட்ட கடிதமொன்றினை வழங்கியுள்ளதாக போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.