ஓட்டப்பிடாரம் தொகுதியில் மு.க.ஸ்டாலின் நாளை பிரசாரம்!

279 0

ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சண்முகையாவை ஆதரித்து மு.க.ஸ்டாலின் நாளை மற்றும் நாளை மறுநாள் பிரசாரம் செய்கிறார். 

ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற மே 19-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந்தேதி தொடங்கி நேற்று (29-ந்தேதி) மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க. வேட்பாளர் மோகன், தி.மு.க. வேட்பாளர் சண்முகையா, அ.ம.மு.க. வேட்பாளர் சுந்தரராஜ், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் காந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அகல்யா மற்றும் சுயேட்சைகள் உள்பட 37 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

இறுதி நாளான நேற்று ஒரே நாளில் 28 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடந்தது. ஓட்டப்பிடாரம் தொகுதியை பொறுத்தவரை 5 முனை போட்டி நிலவுகிறது.

தேர்தலுக்கு இன்னும் 19 நாட்கள் மட்டுமே இருப்பதால் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதான கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அவர்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை நாளை (1-ந்தேதி) தொடங்குகிறார். தனது கட்சி சார்பில் போட்டியிடும் சண்முகையாவை ஆதரித்து அவர் தொகுதி முழுவதும் திறந்த வேனில் சென்று மக்களை நேரடியாக சந்தித்து நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.

இதற்காக மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று தூத்துக்குடி வருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பின்பு அவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். மே தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் நாளை (1-ந்தேதி) காலை பேரணி மற்றும் நினைவேந்தல் கூட்டம் நடக்கிறது. பேரணி தூத்துக்குடி டூவிபுரம் 5-வது தெருவில் தொடங்கி வி.வி.டி. சிக்னல் வழியாக சிதம்பரம் நகர் பஸ் நிறுத்தம் அருகே அமைக்கப்பட்டுள்ள மேடைக்கு வந்து சேருகிறது.

இந்த பேரணியில் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். பின்பு நடக்கும் நினைவேந்தல் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

பின்னர் நாளை மாலை ஓட்டப்பிடாரம் தொகுதியில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அவர் திறந்த வேனில் சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார். தூத்துக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் நல சங்க சந்திப்பில் மாலை 5 மணிக்கு பிரசாரத்தை தொடங்கும் மு.க.ஸ்டாலின் மாலை 6 மணிக்கு மாப்பிள்ளையூரணியிலும், இரவு 7 மணிக்கு தருவைகுளத்திலும், 7.30 மணிக்கு புதியம்புத்தூரிலும், 8 மணிக்கு ஓட்டப்பிடாரத்திலும் பிரசாரம் செய்கிறார்.

மறுநாள் (2-ந்தேதி) காலை 8.30 மணிக்கு ஸ்பிக்நகர் குடியிருப்போர் நலச்சங்க சந்திப்பில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார். அன்று மாலை 5 மணிக்கு கோரம்பள்ளம், புதுக்கோட்டை, கூட்டாம்புளி, தங்கம்மாள்புரம், கட்டாலங்குளம் ஆகிய பகுதிகளிலும், இரவு 7.30 மணிக்கு முடிவைத் தானேந்தல் கிராமத்திலும் பிரசாரம் செய்கிறார்.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பிரசாரம் செய்வதால் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மு.க.ஸ்டாலினை தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்களும் பிரசாரம் செய்ய உள்ளதால் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.