அரசாங்கம் சிறுபான்மையின மக்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்-சுவாமிநாதன்

382 0

 

swaminathan

மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையின மக்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா அரசாங்கம் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டுமென ஐ.நாவின் சிறுபான்மையினர் தொடர்பான விசேட அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் சிறைச்சாலைகள் புனரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுடனான சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் அரசாங்கம் மதிப்பீட்டினை மேற்கொள்ள வேண்டுமென்பதோடு, குறிப்பாக சிறுபான்மையினரின் மதம் சார்ந்த விடயங்கள் மற்றும் மனித உரிமை விடயங்கள் தொடர்பில் அதிக அக்கறை காட்ட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனினும் ஸ்ரீலங்காவின் தற்போதைய அரசாங்கம் மனித உரிமைகள் விடயத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு முன்னேற்றகரமான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ரீட்டா இஷாக் நாடியாவிடம் வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டின் சிறுபான்மையின மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் பதிய ஆணைக்குழுக்களை அரசாங்கம் உருவாக்கியுள்ளதோடு இதனூடாக நாட்டின் ஏனைய பிரஜைகளின் உரிமைகளையும் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஐ.நாவின் சிறுபான்மையினர் தொடர்பான விசேட அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியாவிடம் தெரிவித்துள்ளார்.