புலனாய்வில் ஏற்பட்ட தோல்விக்காக பதவிவிலகப்போவதில்லை- ஜனாதிபதி

271 0

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்டவர்களிற்கும் ஐஎஸ் அமைப்பினருக்கும் தொடர்புகள் உள்ளன என இலங்கையின் புலானய்வு பிரிவினர் கருதுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் குண்டுதாக்குதல்களை மேற்கொண்டவர்களிற்கு ஐஎஸ் அமைப்பு பயிற்சிகளை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள சிறிசேன இலங்கையில் உள்ள தீவிரவாதிகளிற்கும் ஐஎஸ் அமைப்பினருக்கும் இடையிலான தொடர்பு 15 வருடத்திற்கு மேற்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

புலனாய்வு தோல்வி காரணமாக தான் பதவி விலகவேண்டும் என முன்வைக்கப்படும் கோரிக்கைகளை நிராகரித்துள்ள சிறிசேன முன்னெச்சரிக்கைகளை தனது அதிகாரிகளும் அமைச்சர்களும் உரிய விதத்தில் கையாளவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குண்டுதாக்குதல்கள் இடம்பெற்றவேளை பாதுகாப்பு அமைச்சராகயிருந்த ஹேமசிறி பெர்ணாண்டோவும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவும் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் கவனமற்றவர்களாகவும் பொறுப்பற்றவர்களாகவும் அலட்சியமற்றவர்களாகவும் காணப்பட்டனர் என சிறிசேன தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் என அவர்கள் நினைக்கவில்லை என சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பாரிய தாக்குதல்கள் இடம்பெறலாம் என கிடைத்த தகவல்கள் குறித்து எனக்கு அவர்கள் அறிவிக்கவில்லை எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரதமருக்கும் தனக்கும் இடையில் உள்ள முறுகல்நிலையே இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு காரணம் என விமர்சனங்களை முன்வைப்பவர்களை சிறிசேன சாடியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு என வரும்போது எங்கள் மத்தியில் எந்த கருத்வேறுபாடுகளும் இல்லை மத வேறுபாடுகளும் இல்லை இனவேறுபாடுகளும் இல்லை என சிறிசேன சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார்

நாடு பாதுகாக்க படுவதை உறுதி செய்வதற்காக  நானும் பிரதமரும் அரசாங்கத்தில் உள்ளவர்களும் ஒரேமாதிரியாக சிந்திக்கின்றோம் என சிறிசேன  தெரிவித்துள்ளார்.