பஞ்சாப்பில் அகல் பல்கலைக்கழகத்தில் 12 மாணவிகளின் ஆடைகளை களைந்த விடுதி பெண் வார்டன்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பஞ்சாப் மாநிலம் பதிந்தா மாவட்டம் தல்லன்டிசபோ என்ற இடத்தில் அகல் பல்கலைக்கழகம் உள்ளது. இங்குள்ள விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் விடுதியில் உள்ள கழிவறையில் சானட்ரி நாப்கின்கள் கிடந்தது. இதை பார்த்து 2 விடுதி பெண் வார்டன்கள் மாணவிகளிடம் கழிவறையில் யார் சானட்ரி நாப்கின்களை வீசினீர்கள் என்று கேட்டனர். ஆனால் மாணவிகள் யாரும் பதில் கூறவில்லை.
இதையடுத்து சானட்ரியை பயன்படுத்தியது யார்? என்று கண்டுபிடிப்பதற்காக மாணவிகளின் ஆடைகளை களைய முடிவு செய்தனர். 2 பெண் பாதுகாவலர்கள் மூலம் 12 மாணவிகளின் ஆடைகளை களைந்து சோதனை செய்தனர்.
இந்த விவகாரம் குறித்து மாணவிகள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் செய்தனர்.
ஆனால் அதுபற்றி பல்கலைக்கழக நிர்வாகிகள் கண்டு கொள்ளவில்லை. பெண் வார்டன்கள், பெண் பாதுகாவலர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து மாணவ- மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவர்கள் கூறும்போது, பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள்-மாணவிகள் பேசிக்கொள்ளக் கூட அனுமதிப்பதில்லை என்றும் குற்றம் சாட்டினர்.
போராட்டம் நடத்திய மாணவர்களை பல்கலைக்கழக நிர்வாகிகள் சமாதானப்படுத்தினர். பல்கலைக்கழக டீன் ஜோஹல் கூறும்போது, மாணவிகளிடம் அநாகரீகமாக நடந்த 2 பெண் வார்டன்கள், 2 பெண் பாதுகாவலர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்றார்.