23-ந்தேதிக்குப்பிறகு அரசியலில் மு.க.ஸ்டாலின் பூஜ்ஜியமாகி விடுவார் – ஜெயக்குமார்

282 0

23-ந்தேதிக்குப் பிறகு அரசியலில் மு.க.ஸ்டாலின் பூஜ்ஜியமாகி விடுவார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் தான் 3 தொகுதி எம்.எல்.ஏ.க்களை நீக்கம் செய்ய முயற்சிக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். அது முற்றிலும் தவறு. அந்த மாதிரியான நிர்பந்தங்கள் எதுவும் இல்லை. இந்த வி‌ஷயத்தில் பேரவை தலைவரின் அதிகாரத்துக்குள் யாரும் செல்ல முடியாது. அது குறித்து நானும் எந்த கருத்தும் கூற முடியாது.

கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி ஜெயலலிதாவின் அரசை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும், இந்த கட்சியை அழித்துவிட வேண்டும் என்று தி.மு.க.வும், அதனுடைய ‘பி’ டீம் தினகரனும் கைகோர்த்து பல்வேறு விதமான நடவடிக்கைகளை அரங்கேற்றினார்கள். அது அனைத்தும் அவர்களுக்கு கை கொடுக்கவில்லை. அவர்களுடைய எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. வருகிற 23-ந் தேதிக்குப் பின்னர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியலில் பூஜ்ஜியமாகி விடுவார்.

ஜூன் 30-ந்தேதி நாங்கள் ஆட்சி அமைத்து விடுவோம் என்று துரை முருகன் கூறுகிறார். திண்டுக்கல் பெரியசாமி 11 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பு வந்ததும் ஆட்சி அமைத்து விடுவோம் என்று கூறுகிறார். இரண்டுமே நடைபெறப்போவதில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதி இருக்கும் போதே அ.தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியவில்லை. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. கோட்டை. அதனை இந்த தேர்தலில் மீண்டும் நிரூபிப்போம். வருகிற 23-ந்தேதி அனைவருக்கும் இது தெரியும்.

மேற்கண்டவாறு அவர் கூறினார்.

பின்னர் திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க. – அ.ம.மு.க. இடையே தான் போட்டி என தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளாரே என நிருபர்கள் கேட்ட போது ஆட்டத்தில் இல்லாதவர்களை பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? பந்தயத்தில் இல்லாதவர்கள் எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசுவார்கள். உண்மையில் அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான் போட்டி என்றார்.