உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் தொடர்குண்டுத் தாக்குதல்களை அடுத்து பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து அகதிகளாக வருகைதந்து இலங்கையில் தங்கியிருந்த கிறிஸ்தவ அகதிகள், அவர்கள் தங்கியிருந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அவர்கள் தங்குவதற்கு தற்போதுவரை அரசாங்கத்தினால் இடமொன்று ஒதுக்கப்படவில்லை என்று அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.
அருட்தந்தை சக்திவேல் இவ்விடயம் தொடர்பில் மேலும் கூறுகையில்,
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் கத்தோலிக்க சமூகத்தினர் எதிர்கொள்ள நேர்ந்த பிரச்சினைகளைத் தொடர்ந்து சுமார் 8 வருடங்களுக்கு முன்னர் அவ்விரு நாடுகளைச் சேர்ந்த சுமார் 500 கத்தோலிக்கக் குடும்பங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தாபனத்தில் தம்மை அகதிகளாகப் பதிவுசெய்து இலங்கைக்கு வருகை தந்தனர். எனினும் இலங்கை அரசாங்கத்தினால் அவர்களுக்கு இன்னமும் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கவில்லை.
அகதிகளாக இலங்கைக்கு வருகைதந்த அவர்கள் வெவ்வேறு பிரதேசங்களில் தங்கியிருந்ததுடன், அவர்களில் பெருமளவானோர் கத்தோலிக்கர்கள் செறிந்து வாழும் நீர்கொழும்பு பிரதேசத்தில் இதுவரை காலமும் வாழ்ந்துவந்தனர். அண்மையில் நாட்டில் இடம்பெற்ற தொடர்குண்டுத் தாக்குதல்களை அடுத்து அவர்கள் நீர்கொழும்புப் பிரதேசவாசிகளால் தங்கியிருந்த வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து அவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களில் சுமார் 600 பேர் பஸ்யாலை பிரதேசத்திற்கும், சுமார் 90 பேர் அத்துருகிரிய பிரதேசத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டனர்.
எனினும் அத்துருகிரிய பிரதேசவாசிகள் அகதிகளை அனுமதிப்பதற்கு மறுத்த நிலையில் மீண்டும் அவர்கள் நீர்கொழும்பிற்கு அனுப்பப்பட்டனர்.
தற்போது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து வருகைதந்த கத்தோலிக்க அகதிகளில் சுமார் 150 பேர் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தை அண்மித்த வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தங்கவைப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அகதிகளாக நாட்டிற்கு வருகை தந்தவர்கள் தங்குவதற்கு இடமொன்றையும், பாதுகாப்பையும் அரசாங்கம் வழங்குமாயின், அவர்களுக்குத் தேவையான ஏனைய வசதிகளை ஐக்கிய நாடுகள் தாபனம் வழங்கும். ஆனால் அரசாங்கம் அவர்கள் தொடர்பான எவ்வித தீர்மானங்களையும் இன்னமும் மேற்கொள்ளாமையினால் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர் என்று குறிப்பிட்டார்.