ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்களைத் தொடர்ந்து நாட்டில் தோன்றியுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலை கவனத்திற்கொண்டு சகல தேசிய, மாகாண பாடசாலைகளிலும் கடுமையான சோதனைகளை நடத்திய பின்னரே அவற்றை அடுத்தவாரம் திறக்க அனுமதி வழங்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்திருக்கிறது.
இந்த நடவடிக்கைகளுக்கு உதவுமாறு பொலிசாரிடமும் முப்படைகளிடமும் அமைச்சு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
அதிபர்கள், நிருவாக உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை உள்ளடக்கிய பாதுகாப்பு கமிட்டிகளை அமைக்குமாறு கேட்டு கல்வியமைச்சு பாடசாலைகளின் நிருவாகங்களுக்கு சுற்றுநிருபங்களை அனுப்பியிருக்கிறது.
இந்த திட்டத்தின் கீழ் பாடசாலை வளாகத்திற்குள் பிரவேசிக்கும் சகல மாணவர்களும் அந்தந்த பாடசாலைகளைச் சேர்ந்தவர்கள் தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதறற்காக சோதனை செய்யப்படுவர். அத்துடன் அவர்களின் பைகளும் தீவிர சோதனைக்குட்படுத்தப்படும். மேலும் பாடசாலைக்குள் கொண்டுவரப்படும் சகல உபகரணங்களும் வருகின்ற வாகனங்களும் சகல வேளைகளிலும் சோதனைக்க்குட்படுத்தப்படும்.
பாடசாலைகளில் உள்ள விடுதிகளுக்கு 24 மணி நேர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.அத்துடன்.விடுதிகளுக்கு ஆட்கள் வருகை தருவது கடுமையாகக் கட்டுப்படுத்தப்படும்.
அவசரகால நிலையின்போது மாணவர்களின் பெற்றோர்களுக்கும் பாடசாலை நிருவாகங்களுக்கும் அறிவிப்பதற்கும் எச்சரிக்கை அறிவிப்பு விடுப்பதற்கும் பாதுகாப்பு கமிட்டிகள் பொறிமுறைகளை வகுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கல்வியமைச்சு சுற்றுநிருபத்தின் மூலம் கேட்டிருக்கிறது.