விண்ணில் இருந்து தீர்வுகாண முடியுமா என்று விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர் .
இன்றைய பிளாஸ்டிக் கழிவுப் பிரச்சினைகளில் அதிக கவனத்துக்குரிய ஒன்று, கடலில் மிதக்கும் கழிவுகள். இப்பிரச்சினைக்கு ‘விண்ணில்’ இருந்து தீர்வு காண முடியுமா என்று விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.
அதாவது, கடலில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை விண்ணில் இருந்து கண்டுபிடிக்க முடியுமா என விஞ்ஞானிகள் ஆராய்கின்றனர்.
இது மிகவும் கடினமான விஷயம் என்பதை பலரும் ஒப்புக்கொள்கின்றனர். காரணம், நாம் தூக்கி எறியும் தனித் தனி குப்பைகள் மிகச் சிறிய அளவில் இருக்கும் என்பதால், அவற்றை செயற்கைக்கோள்கள் மூலம் கண்டுபிடிப்பது சிரமம்.
ஆனால், தண்ணீரில் பிளாஸ்டிக்கின் ஒளி பிரதிபலிக்கும்போது அக்கழிவு களைக் கண்டுபிடிக்க முடியும் என்ற கண்ணோட்டத்தில் இந்த விஷயத்தை அணுகுகிறார்கள்.
இங்கிலாந்தின் பிளைமவுத் கடல் ஆய்வகம் நடத்திய சோதனைகள் இதை ஊக்குவிக்கும் விதத்தில் அமைந்துள்ளன.
‘கடலில் ஒரு தனி பிளாஸ்டிக் பாட்டில் மட்டும் மிதப்பதை நீங்கள் பார்க்க முடியாது. ஆனால், இந்தப் பொருட்களை ஒட்டுமொத்தமாக நாம் காண முடியும்’ என ஆய்வாளர் டாக்டர் லாரன் பியர்மேன் கூறினார்.
பூமியைக் கண்காணிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சென்டினல் 2 செயற்கைக்கோள்கள், ஐரோப்பிய விண்வெளி மையத்தால் கடந்த 2015 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் நிறுவப்பட்டன.
இந்தச் செயற்கைக்கோள்களின் பிரதான நோக்கம், தொடர்ச்சியாக மாறி வரும் பூமியின் நிலப்பரப்புகளின் வரை படங்களை உருவாக்குவது ஆகும். அதே சமயத்தில் இவை கடலோரப் பகுதி களின் நிலையையும் படம்பிடிக்கின்றன.
கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கண்காணிக்க வேண்டும் என்றால், கடலோரப் பகுதிகள்தான் சரியான இடம். ஏனெனில், ஆண்டு தோறும் கடலில் கலக்கும் 80 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் இந்த இடத்தின் வழியாகத்தான், அதாவது நதிகள் மற்றும் முகத்துவாரங்கள் வழியேதான் கடலில் சென்று சேர்கின்றன.
சென்டினல் செயற்கைக்கோள்கள் இங்கிலாந்தில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இந்த மண்டலங்களைப் படம் பிடிக்கும்.
ஆனால் இதில் ஒரு பிரச்சினை இருப்பதாக பியர்மேன் கூறுகிறார். செயற்கைக்கோள்கள் எடுக்கும் படங்கள் 10 மெகா பிக்சல் ரெசல்யூஷனில் இருக்க, ஒவ்வொரு பிக்சலும் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தில் இருந்தால் மட்டுமே படத்தில் இருக்கும் பொருட்களை நாம் சரியாகக் கண்டறிய முடியும்.
இருந்தபோதும், தனக்கு ஆதரவாக இருக்கக்கூடிய இரு காரணிகளை அவர் குறிப்பிடுகிறார்.
ஒன்று, நதிகள் சென்று கடலில் சேரும் இடத்தில்தான், மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் ஒன்றாகச் சேரக்கூடும். பெரும்பாலான நேரங்களில் அது செடிகொடிகளாக இருக்கலாம். ஆனால், பிளாஸ்டிக் போன்ற மற்ற குப்பைகளும் அதில் அடங்கும்.
இரண்டாவது காரணி, சென்டினல் செயற்கைக்கோள்களில் உள்ள கண்டறியும் கருவிகளின் தரம் இதற்குச் சாதகமாக அமைகிறது.
ஒவ்வொரு பொருளும் ஒளியை உண்டாக்கும் மாறுபட்ட அலைவரிசைகளை துல்லியமாக இதனால் கண்டுபிடிக்க முடியும். இது தரும் புகைப்படங்களின் பிக்சல்களை வைத்து அது என்ன பொருள் என்பதைக் கண்டுபிடிக்க முடியும் என்று பிளைமவுத் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
விஞ்ஞானிகளின் இந்த முயற்சி பலன் தருமா என்பது போகப் போகத் தெரியும்.