அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் இந்திய என்ஜினீயர் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. அத்துடன் மாகாண கவர்னர், நாடாளுமன்ற செனட் சபை, பிரதிநிதிகள் சபை தேர்தலும் நடக்கிறது.
நியூ ஜெர்சி மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கு நடக்க உள்ள தேர்தலில் இந்திய வம்சாவளி என்ஜினீயர் ஹிர்ஷ் சிங் (வயது 33), குடியரசு கட்சி சார்பில் போட்டியிட விரும்புகிறார். இவர் ஜனாதிபதி டிரம்பின் தீவிர ஆதரவாளர் ஆவார். ஹிர்ஷ் சிங், செனட் சபை வேட்பாளர் போட்டியில் குதித்துள்ளார்.
நியூஜெர்சியில் தற்போது ஜனநாயக கட்சியை சேர்ந்த கோரி புக்கர் செனட் சபை எம்.பி.யாக உள்ளார். அவர் அடுத்த ஆண்டு நடக்க உள்ள தேர்தலில் மீண்டும் போட்டியிடுவாரா என தெரியவில்லை. குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் முதலில் ஹிர்ஷ் சிங் இறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.