வங்க கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘பானி’ புயலாக மாறியது. தீவிர புயலாக இன்று உருமாறுகிறது.
இந்திய பெருங்கடல் மற்றும் அதனையொட்டி உள்ள தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் கடந்த 25-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி கொஞ்சம், கொஞ்சமாக தீவிரமடைந்து தற்போது ‘பானி’ புயலாக உருவெடுத்து இருக்கிறது. இந்த புயல் தீவிர புயலாக இன்று உருமாறுகிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தீவிரம் அடைகிறது
தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று (நேற்று முன்தினம்) நிலைகொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (நேற்று) காலை வலுப்பெற்று வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது. இது பிற்பகலில் புயலாக மாறியுள்ளது.
‘பானி’ என பெயரிடப்பட்ட இந்த புயல், வட தமிழக கடற்கரை பகுதிகளில் இருந்து சுமார் 1,250 கி.மீ. தொலைவில் நிலைகொண்டு உள்ளது. இது அடுத்த வரும் 24 மணி நேரத்தில் (இன்று) தீவிர புயலாக வலுப்பெற கூடும். இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 30-ந் தேதி மாலை, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதிகள் அருகே வரக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தற்போதைய நிலவரப்படி இந்த புயல் வட தமிழக கடற்கரையில் இருந்து 200 கி.மீ. முதல் 300 கி.மீ. தூரம் வரை வருவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. இந்த புயல் தமிழக பகுதிகளில் கரையை கடப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு தான்.
வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வருகிற 30 மற்றும் மே 1-ந் தேதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்கள் 28-ந் தேதி (இன்று) தென்கிழக்கு வங்க கடல் பகுதிக்கும், 29, 30 மற்றும் மே 1-ந் தேதிகளில் தென்மேற்கு வங்க கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம். ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் 28-ந் தேதிக்குள் (இன்று) கரைக்கு திரும்பிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மிதமான மழைக்கு வாய்ப்பு
முன்னதாக, ‘பானி புயல் காரணமாக தமிழகத்தில் மழை வாய்ப்பு எப்படி இருக்கிறது?’ என்று எஸ்.பாலச்சந்திரனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, “பானி புயலின் முந்தைய கணிப்புகளின்படி தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த நிலை இல்லை. ஒருவேளை புயல் திசை மாறி செல்லும் பட்சத்தில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு.
சென்னையை பொறுத்தவரை ஓரிரு இடங்களில் லேசான மழையை எதிர்பார்க்கலாம்” என்று அவர் பதில் அளித்தார்.