ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கத்தார் தலைநகர் தோகாவில் நடந்த ஆசிய தடகள போட்டியில், 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமை தேடி தந்தவர் தங்க மங்கை கோமதி மாரிமுத்து. அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகளும், நிதி உதவியும் குவிந்து வருகிறது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். மேலும் அவருக்கு தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
ரூ.10 லட்சம் நிதி
தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை தேடித் தரும் வகையில் தோகா ஆசிய தடகளப்போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று சாதனை படைத்த கோமதி மாரிமுத்துவுக்கும், அதே போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தொடர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை புரிந்திருக்கும் ஆரோக்கிய ராஜீவுக்கும் தி.மு.க. சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
விளையாட்டுத்துறையில் இந்த இருவரும் நிகழ்த்தியுள்ள சாதனைகளை ஊக்குவித்து, உற்சாகப்படுத்தும் வகையில் கோமதி மாரிமுத்துவுக்கு 10 லட்சம் ரூபாய் நிதியும், ஆரோக்கிய ராஜீவுக்கு 5 லட்சம் ரூபாய் நிதியும் தி.மு.க. சார்பில் வழங்கப்படுகிறது. இந்தியாவிற்கான இவர்களின் சாதனைகள் மென்மேலும் தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.