உயிர்த்த ஞாயிறு நாள் வழிபாட்டுக்கு அரசியல்வாதிகள் ஏன் செல்லவில்லை?

458 0

குண்டுத்தாக்குதல் பற்றி முற்கூட்டியே போதிய தகவல் கிடைத்திருந்தும் அதனைத் தடுக்க புலனாய்வுத்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கும் அப்பால், உயிர்த்த ஞாயிறு  திருநாள் வழிபாட்டுக்கு அரசியல்வாதிகள் எவரும் செல்லாதது ஏன் என்ற கேள்விக்கு யார் பதில் கூறுவர்?

இலங்கையில் அவசர காலச் சட்டம் மீண்டும் பிரகடனமாகியுள்ளது. ஏற்கனவே நடைமுறையிலுள்ள பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்துக்கு மேலதிகமாக இது.

இரவு நேரங்களில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. எவ்வளவு நாட்களுக்கு இது தொடரும் என்று இப்போதைக்குக் கூற முடியாது.

இராணுவமும் பொலிசாரும் இணைந்து காவற்கடமைகளையும், திடீர்ச் சோதனைகளையும் ஆரம்பித்துள்ளனர். தேடுதல் நடவடிக்கைகள் இன்னொரு புறம்.

சோதனைச் சாவடிகள் மீண்டும் முளைத்துள்ளன. அடையாள அட்டைச் சோதனை என்ற பெயரில் கெடுபிடிகள் தொடங்கியுள்ளன.

வீதிகளில் தனித்து நிற்கும் சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் வெடிக்க வைக்கப்படுகின்றன  தேசிய பாதுகாப்பு என்ற பெயரில். அநாதரவாக உள்ள பொதிகள் பொசுக்கப்படுகின்றன.

பாடசாலைகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் அவசரகால விடுமுறை. நிலைவரத்தைப் பொறுத்து மீண்டும் திறக்கப்படும்.

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் 359 பேர் பலியாகி, 500க்கும் அதிகமானோர் காயமடைந்ததன் பின்னரான நடவடிக்கைகள் இவை.

இயலாமையை ஒப்புக்கொள்ள விரும்பாத வெட்கம்கெட்ட சிங்களதேசத் தலைமைகள், போட்டியிட்டுக் கொண்டு அறிக்கைகள் வாயிலாக முரண்படுகின்றன.

ஏப்ரல் 21ஆம் நாள் காலையிலிருந்து மதியம்வரை மூன்று தேவாலயங்களிலும் ஐந்து விடுதிகளிலும் அடுத்தடுத்து வெடித்த குண்டுகளால் வழிபாட்டில் ஈடுபட்டவர்களும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளும் அப்பாவிக் குடிமக்களும் கொல்லப்பட்டனர்.

கொலையுண்டவர்களில் 45 வரையானோர் சிறார்களென யுனிசெஃப் அறிவித்துள்ளது. ஏறத்தாழ அதேயளவு தொகையினர் 19 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர். இவர்களுள் 11 பேர் இந்தியர். காயமடைந்தவர்களில் 12 பேர் வெளிநாட்டினர். மேலும் 16 வெளிநாட்டவரைக் காணவில்லை.

குண்டுத்தாக்குதல் நடைபெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே இந்தியப் புலனாய்வுத்துறை இலங்கைப் புலனாய்வுத்துறையினருக்கு எச்சரிக்கைத் தகவல் கொடுத்ததை எல்லாம் முடிந்த பின்னரே இலங்கை அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

தமக்கு இதுபற்றி எதுவுமே தெரிவிக்கப்படவில்லையென்று முதலில் பகிரங்கமாகக் கூறியவர் நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

தனக்கும்கூட எதுவுமே தெரிவிக்கப்படவில்லையென்று அடுத்துக் கூறியவர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் றூவான் விஜேவர்த்தன. இவர் பிரதமர் ரணிலின் தாய்மாமனின் மகன். அதாவது மைத்துனர்.

2018 அக்டோபர் மாத உள்நாட்டு அரசியல் புரட்சியின் பின்னர் ரணிலின் கட்சியிடமிருந்த சட்டம் ஒழுங்கு அமைச்சை பறித்த தமதாக்கிக் கொண்ட ஜனாதிபதி மைத்திரி, உளவுத்துறைக்குக் கிடைத்த முற்கூட்டிய தகவலை வேண்டுமென்றே ரணிலுக்கு மறைத்ததாக சந்தேகம் பரவலானது.

ஆனால், உளவுத்துறைக்கு இந்தியத் தரப்பு வழங்கிய முற்கூட்டிய எச்சரிக்கைத் தகவல் தமக்குக்கூட தெரிவிக்கப்படவில்லையென்று மைத்திரி சொன்னபோதுதான் ஆட்சியிலிருக்கும் ஓட்டை தெரியவந்தது.

சொல்லப்போனால் இலங்கையில் உளவுத்துறை அல்லது புலனாய்வுத்துறை என்பது ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் மற்றும் அமைச்சர்களுக்கு அப்பாற்பட்ட தனியான ஓர் அரசாங்கமாக இயங்குவதென்பது இதன் பின்னரே பலருக்கும் தெரியவந்தது. இதனையிட்டு ஜனாதிபதி மைத்திரி தலைகுனிய வேண்டும். அல்லது பதவி துறந்திருக்க வேண்டும்.

இது இப்படியிருக்க, உளவுத்துறைத் தகவல் வேறு வழியாக முற்கூட்டியே தங்களுக்குத் தெரிய வந்ததென அமைச்சர்கள் ஹரின் பெர்னான்டோவும், மனோ கணேசனும் ஊடகங்களுக்குக் கூறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

இது உண்மையானால், இவர்கள்கூட இத்தகவலை ஏன் தங்கள் பிரதமருக்குத் தெரிவிக்கவில்லையென்ற கேள்வி எழுகின்றது.

தனது பாதுகாப்பு அதிகாரிகள் தனக்கு இதனைத் தெரிவிக்கவில்லையே என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச அங்கலாய்த்துக் கொண்டதை பத்திரிகைகள் மறைக்க விரும்பவில்லை.

வெடித்த குண்டுகளுக்குள் இரத்தத்தில் நனைந்து சிதறிக் கிடந்த சடலங்களை முன்னிறுத்தி அரசியல்வாதிகளின் அறிக்கைப் போர் தொடர்கின்றது.

அமைச்சர்கள் ராஜித சேனரத்ன, கபீர் ஹசீம், மங்கள சமரவீர, லக்ஸ்மன் கிரியெல்ல உட்பட பலர் தம்மி~;டப்படி தங்களையும் தங்கள் கட்சியையும் காப்பாற்றும் அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.

தேசிய தௌவீத் ஜமாத் என்ற இயக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட ஏழு பேர் குண்டுத் தற்கொலைதாரிகள் என்று படங்களுடன் விபரம் வெளியாகியுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பும் அறிக்கை மூலம் உரிமை கோரியுள்ளது.

மைத்திரியின் நெருங்கிய சகாக்களான கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுனர் ஆசாத் சாலி, அமைச்சர் றிசாத் பதியுதின், நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோருக்கும் குண்டுத் தாக்குதல் நடத்தியவர்களுக்குமிடையில் இறுக்கமான தொடர்பு இருப்பதாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எதிரணியினர் பலரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ சுமந்திரன், ஹிஸ்புல்லாவை நோக்கி விரல் சுட்டி குற்றஞ்சாட்டியுள்ளார். எதுவுமே கேட்காததுபோல எதிர்கட்சித் தலைவர்கள் கூட்டத்தையும், சர்வமத தலைவர்கள் கூட்டத்தையும் நடத்துகிறார் மைத்திரி.

இதுபோதாதென்று நாட்டு மக்களுக்கு தினமும் உரையாற்றுவது வேறு.

மைத்திரியும் ரணிலும் ஒரே ஆட்சியின் இரு தூண்கள் என்பதை மறந்து தனித்தனியாக தம்வழி சென்று கொண்டிருக்கின்றனர்.

இதற்கு உதாரணமாக வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் ராஜதந்திரிகளுடனான கூட்டத்தைச் சொல்லலாம். இருவரும் தனித்தனியாக தூதுவர்களுடன் கூட்டங்களை நடத்தி தங்களுக்குள் இருக்கும் பிளவை சர்வதேசத்தின் முகத்துக்கு காட்டுகின்றனர்.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளை சர்வதேச பயங்கரவாதமென்றும், இதனை வேரொடு ஒழிக்க வேண்டுமென்றும் குரல் கொடுப்பவர்கள் சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு விடுதலைப் புலிகளை தங்கள் பக்கத்துக்கு அணைப்பதை அவதானிக்க முடிகிறது.

விடுதலைப் புலிகள் ஆயுதப் படையினரை இலக்கு வைத்தே தாக்குதலை நடத்தினார்கள், வெளிநாட்டினரை அவர்கள் ஒருபோதும் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவில்லை, தலைநகரில் இதுபோன்ற பாரிய தாக்குதலை அவர்கள் நடத்தவில்லையென்று ரணில், மைத்திரி உட்பட பல அமைச்சர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால், மகிந்த ராஜபக்ச தமது கருத்தை வேறுவிதமாகப் பகிர்ந்துள்ளார். விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் புலம்பெயர் தமிழரூடாக நிதி சேகரிப்பதை பாதிக்கும் என்பது கருதியே வெளிநாட்டினர் எவரையும் கொலை செய்யவில்லையென்று கொச்சைத்தனமாக கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இனத்தின் விடுதலைக்காகப் போராடினர். இவர்களின் போராட்டங்களை இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் போராட்டங்களுடன் ஒப்பிடுவது தவறு என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியிருப்பதை மகிந்தவின் கூற்றுக்குப் பதிலாகச் சொல்லலாம்.

இவ்விடத்தில், மைத்திரி – ரணில் கூட்டுத்தலைமையிலான அரசாங்கத்தை நோக்கி சில கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன:

முற்கூட்டியே கிடைத்த எச்சரிக்கை தகவல் தொடர்பாக புலனாய்வுத்துறை எடுத்த நடவடிக்கை என்ன? இதுபற்றி பாதுகாப்புச் சபைக்கு அறிவிக்கப்பட்டதா? சந்தேகத்துகிடமாகக் கைதான சிலரை விடுவிக்குமாறு அழுத்தம் கொடுத்த அரசியல்வாதி யார்? கடந்த பல மாதங்களாக பாதுகாப்புச் சபை கூட்டத்துக்கு பிரதமர் அழைக்கப்படாதது ஏன்? பொலிஸ்மா அதிபர் முற்கூட்டிக் கிடைத்த தகவலுக்கு என்ன நடவடிக்கை எடுத்தார்?

இறுதியில் முனைப்பான ஒரு கேள்வியுண்டு.

குண்டுத்தாக்குதல் பற்றி முற்கூட்டியே போதிய தகவல் கிடைத்திருந்தும் அதனைத் தடுக்க புலனாய்வுத்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கும் அப்பால், உயிர்த்த ஞாயிறு திருநாள் வழிபாட்டுக்கு அரசியல்வாதிகள் எவரும் செல்லாதது ஏன் என்ற கேள்விக்கு யார் பதில் கூறுவர்?