போதைப்பொருளுக்கும் ஐ.எஸ் தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கும் – சிறிசேன

229 0

தனது போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையின் காரணமாக இலங்கையில் ஐ.எஸ் தாக்குதல் விரைவுபடுத்தப்பட்டிருக்கக்கூடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி:
உலகில் மத தீவிரவாதத்திற்கும் போதைப்பொருள் வியாபாரத்திற்குமிடையில் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன. மத தீவிரவாதமும் போதைப்பொருள் கடத்தலும் சர்வதேச ஆயுத கடத்தலும் ஒரே வலையமைப்பைக் கொண்டிருக்கின்றன. இந்த தகவல்களை பெற்றுக்கொள்ள நான் பல புத்தகங்களை வாசித்தேன். அதேபோன்று போதைப்பொருள் கடத்தலுக்கும் பயங்கரவாதத்திற்குமிடையிலும் பலமானதொரு பினைப்பு காணப்படுகின்றது. எல்ரீரீஈ. இயக்கத்தின் முக்கிய வருமான வழியாக இருந்ததும் சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரமுமேயாகும்.

சிலவேளை ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் அவர்களது கொள்கை அடிப்படையில் உலகின் ஏனைய நாடுகளின் மீது மேற்கொண்ட தாக்குதலைப்போன்று நமது நாட்டின் மீதும் இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்க கூடும். ஆயினும் அந்த தாக்குதல் எனது போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையின் காரணமாக விரைவுபடுத்தப்பட்டிருக்கக்கூடும். எனவே இந்த சந்தர்ப்பத்தில் நாம் அன்று பாராளுமன்றத்தில் பேசியதைப்போன்று வாய்க்கு வந்த எல்லாவற்றையும் பேசாது பொறுப்புடனும் கட்டுப்பாட்டுடனும் செயற்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் என்பது என்னவென்பதைப் பற்றி தெளிவாக விளங்கிக்கொள்வது இந்த சந்தர்ப்பத்தில் கட்டாய தேவையாகும். அத்தோடு இனவாதம் என்பதும் பயங்கரவாதம் என்பதும் இரு வேறுபட்ட விடயங்களாகும் என்பதையும், பயங்கரவாதம் என்றால் என்பதை பற்றியும் எமக்கு தெளிவாகத்
தெரியும். இருப்பினும் சர்வதேச பயங்கரவாதம் பற்றி நாம் இதுவரையில் ஊடகங்களின் வாயிலாக மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்று அதனை அனுபவிக்க நேர்ந்திருக்கிறது.

குறிப்பாக ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் அரசியல் நோக்கம் பற்றி பார்க்கின்றபோது, அவ்வியக்கம் நாடுகளின் மீது தாக்குதல்களை மேற்கொண்டு அரசியல் ஸ்திரமற்ற சூழலை உருவாக்கி, மக்களின் அமைதியை சீர்குழைத்து அவர்களது நோக்கங்களை அடைந்துகொள்ள முன்னெடுத்துவரும் செயற்பாடுகளாகவே இத்தாக்குதல்கள் அமைகின்றன. முக்கியமாக அவர்கள் இந்த தாக்குதல்களை மேற்கொள்வது மேற்குலக அரசியல் சிந்தனைக்கும் மேற்குலக சமய தத்துவத்திற்கும் எதிராகவேயாகும்.

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் தலைவர்கள் இற்றைக்கு சில வருடங்களுக்கு முன்னர் வத்திக்கானிலும் தமது இயக்கத்தின் கொடியை ஏற்றுகின்ற நாளே அவ்வியக்கத்திற்கு உண்மையான வெற்றி கிட்டிய நாளாகுமென குறிப்பிட்டிருந்தனர். அந்த அடிப்படையிலேயே இந்த கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்படுகின்றதென நான் நினைக்கின்றேன்.

போதைப்பொருள்கள் பற்றி பேசுகின்றபோது நான் போதைப்பொருளுக்கு எதிராக முன்னெடுக்கின்ற செயற்திட்டங்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் போதைப்பொருளுக்கு எதிரான ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஒருவர்தான் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள். சுமார் 3 வாரங்களுக்கு முன்னர் அவரின் தலைமையில் ஊர்வலம் ஒன்றை ஏற்பாடு செய்து சுமார் நான்காயிரம் பேர் மோதரை பிரதேசத்தில் ஒன்று சேர்ந்து எனக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். கார்டினல் அவர்களின் இந்த போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கை போதைப்பொருள் ஒழிப்பிற்கு பெரும் பலமாக இருந்தது. இதனால்தான் ஐ.எஸ்.ஐ.எஸ்
இயக்கத்தின் நோக்கம் அதன் பின்னணி சர்வதேச தொடர்புகள் ஆகியவற்றைப் பற்றி நாம் அறிவுபூர்வமாக விளங்கிக்கொள்ள வேண்டும். சந்தர்ப்பவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

எமது நாட்டில் 30 வருட காலமாக இருந்து வந்த எல்ரீரீஈ. இயக்கத்திற்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்திற்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன. எல்ரீரீஈ. பயங்கரவாதத்தை தோல்வியுறச் செய்த பெறுமை எமது இராணுவத்தினருக்கு இருக்கின்றது. அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற உரைகளில் அநேகமானவர்கள் வீரர்கள் போன்று பேசினார்கள்.

இந்த தாக்குதலை அரசாங்கத்தினால் தவிர்க்க முடியாமல் போனதாக குறிப்பிட்டார்கள். நாங்கள் என்றால் எல்ரீரீஈ. இயக்கத்தை தோல்வியுறச் செய்தோம் என்றும் கூறினார்கள். நான் ஏற்கனவே கூறியதுபோன்று அமெரிக்காவின் பென்டகனினாலேயே அதனை தவிர்க்க முடியவில்லை. 1600 பேர் ஒரே இடத்தில் பலியானார்கள். அமெரிக்காவைப் போன்ற பாரிய நாட்டுக்கே பயங்கரவாதத்திற்கு முகங்கொடுக்க முடியாமல் போனது. குறிப்பாக அதி நவீன தொழிநுட்பமுள்ள ஒரு நாட்டினாலேயே அது முடியாமல் போனது. எல்ரீரீஈ. இயக்கத்திற்கு எதிரான யுத்தத்தில் சர்வதேச ரீதியாக எமக்கு சிறியளவிலான உதவியே கிடைத்தது.
சர்வதேசத்தில் பெரும்பாலானவர்கள் எல்ரீரீஈ. இயக்கத்திற்கு உதவினர். அது இலங்கையில் இடம்பெற்ற விடுதலை போராட்டம் என்றே மேற்குலக நாடுகள் எல்ரீரீஈ. இயக்கத்திற்கு உதவினர்.

மனித உரிமைப் பற்றி பேசி கடந்த நான்கு ஆண்டுகளாக இராணுவத்தினரையும் புலனாய்வு துறையையும் பலவீனப்படுத்தியவர்களை இன்று இந்த தாக்குதலின் பின்னர் கண்டுகொள்ள முடியாதுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக எனக்கும் அரசாங்கத்திற்குமிடையில் இருந்துவரும் முரண்பாட்டை நீங்கள் அறிவீர்கள். அதற்கு அடிப்படையான காரணம் நாட்டின் இராணுவ புலனாய்பு பிரிவை பலவீனப்படுத்தி இராணுவ அதிகாரிகளை தேவையற்ற விதத்தில் சிறைப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக நான் அரசாங்கத்தின் உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்பை வெளியிட்டமையாகும்.

அச்சந்தர்ப்பங்களில் இந்த நாட்டின் மனித உரிமை அமைப்புகளின் உறுப்பினர்கள் சகலருக்கும் சட்டம் சமமானதாக இருக்க வேண்டுமென வாதிட்டார்கள். ஆயினும் சட்டம் அனைவருக்கும் சம்மானதுதான் அதற்காக பாதுகாப்பு படையினரை பலவீனப்படுத்த முடியாது என்று கூறினேன். அதேபோன்று புலனாய்வு துறையை பலவீனப்படுத்தவும் இடமளிக்க முடியாதெனக் கூறினேன். முன்னாள் இராணுவ தளபதிகள் மூவரை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்ற போது நான் மேற்கொண்ட ஒரு உரையின் காரணமாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவி விலகியது உங்களுக்கு நினைவு இருக்கும் என நான் நினைக்கின்றேன் எனத் தெரிவித்தார்.