நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தொடர்குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் முன்னேற்றகரமானதாக இல்லை. இது போன்ற சந்தர்ப்பங்களில் அனுபவம் மிக்கவர்களுக்கு உரிய நியமனங்களை வழங்காது தத்தமது தேவைக்கேற்ப வழங்கப்பட்டால் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
நீர்கொழும்பு – கட்டுவாப்பிட்டியவில் குண்டு தாக்குதலுக்கு இலக்கான தேவாலயலத்தை நேற்று சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், நினைத்தும் பார்க்க முடியாதளவிற்கு இந்த சம்பவம் எமது நாட்டில் இடம்பெற்றுள்ளது. பத்து வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒரு பாரிய அழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம். பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவித்து விஷேட அதிரடிப்படையினரையும். பொலிஸாரையும் அனைத்து இடங்களிலும் நிறுத்தி வைத்தால் போதாது. இது முழுமையான பாதுகாப்பு நடவடிக்கை கிடையாது. முழுமையாக இந்த பயங்கரவாத செயற்பாடுகளை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளுக்குச் செல்ல வேண்டும். அரசாங்கம் விளையாடிக் கொண்டிருக்கக் கூடிய சந்தர்ப்பம் இதுவல்ல.
கேள்வி : ஜனாதிபதி அல்லது பிரதமர் இந்த விடயம் குறித்து அல்லது பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உங்களுடன் கலந்துரையாடினார்களா?
பதில் : இல்லை. ஜனாதிபதியோ பிரதமரோ இதுவரையில் என்னிடம் கலந்துரையாடவில்லை. எனினும் வேறு சில அதிகாரிகளை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. அவ்வாறு இவர்கள் இந்த விடயம் குறித்து சந்தித்து கலந்துரையாடுபவர்களினால் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்று கருதினால் அவர்களைத் தான் முப்படை தளபதிகளாக நியமிக்க வேண்டும். தத்தமது தேவைக்கேற்றவாறு இவ்வாறான நியமனங்களை வழங்குவதால் எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை.
கேள்வி: இந்த பயங்கரவாத செயற்பாடுகளை ஒழிப்பதற்கு முன்னெடுக்கக் கூடிய நடவடிக்கைகள் குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில் : நாடு அரைவாசிப்பகுதி அழிந்த பின்னர் மீண்டும் ஒரு பீல்ட் மார்ஷல் வரவேண்டிய நிலைமையே ஏற்படும். எனவே இது தொடர்பிலான சிறந்த தீர்மானத்தை எடுப்பதற்கு ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டும். அதனை விடுத்து அவர்கள் தூக்கத்தில் இருப்பதை போல் செயற்பட்டால் இன்னும் பாரிய நெருக்கடிகளையே சந்திக்க நேரிடும்.
கேள்வி : பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருடன் இணைந்து செயற்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டால் அவ்வாறு இணைந்து செயற்படுவீர்களா?
பதில் : இல்லை. அவர்களுடன் இணைந்து செயற்பட்டால் மீண்டும் நான் சிறைச்சாலை செல்ல வேண்டிய நிலைமையே ஏற்படும். நாட்டுக்காக அவ்வாறு செயற்பட வேண்டும் என்று கூறினாலும் அது எனக்கு மாத்திரமல்ல. அனைத்து அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும் என்றார்.