தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாத அரசாங்கம் பதவி விலக வேண்டும்- சிவாஜி

340 0

கோரமான தாக்குதல் சம்பவத்தை தடுத்து நிறுத்த திறமையற்ற அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டுமென முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “நாட்டில் ஏற்பட்ட பாரிய பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உடனடியாக பதவி விலகவேண்டும்.

மேலும் பயங்கரவாத தாக்குதல் குறித்து முன்கூட்டியே  எச்சரிக்கை அறிவுறுத்தல் கிடைக்கபெற்றதென தற்போது ஒப்புக்கொள்ளும் அரசு, சம்பவத்திற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னதாக கூட வெளிப்படுத்தியிருந்தால் மக்கள் விழிப்பாக இருந்திருப்பார்கள்.

இதேவேளை இலங்கையிலிருந்து சென்ற ஒருவர், ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து, ஒரு தாக்குதலில் உயிரிழந்தார் என்ற செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தபோது இலங்கை அரசு மற்றும் புலனாய்வு பிரிவினர் ஏன் கண்களை மூடிகொண்டு இருந்தனர்.

மேலும் வடக்கிலே ஒரு பிரச்சினை என்றால் அதனை  பெரிதுபடுத்தி,  அங்குள்ள இளைஞர்களை கைது செய்து தடுப்பு காவலில் வைத்த அரசு, இந்த தாக்குதலை கவனத்திற் கொள்ளாமல் இருந்தது ஏன்?

மேலும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்று கூறும் அரசு, முஸ்லிம் பயங்கரவாதிகள் என கூறுவதற்கு தயங்குகிறது.

இதற்கு முற்பட்ட காலத்தில் தமிழீழ விடுதலைபுலிகள் என்பதோடு நிற்காது தமிழ் புலிகளென ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் புலிகளென அடையாளப்படுத்தி சர்வதேசத்திற்கு அரசு அறை கூவியது. இவர்களை அடிப்படைவாதிகளென கூறுவதில் அர்த்தம் இல்லை.

இதனைவிட இந்த இஸ்லாம் பயங்கரவாத இயக்கத்திற்கும் கிழக்கு மாகாண ஆளுநர் உட்பட பல அரசியல் தலைமைகள் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் பாரபட்சமின்றி விசாரணை செய்து தண்டிக்கப்பட வேண்டும்.

தமிழீழ விடுதலைப்புலிகள் விவகாரத்தில் தமிழ் பிரதிநிதிகளை விசாரணைக்குட்படுத்த அரசுக்கு முடியுமானால் ஏன் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளை விசாரிக்கமுடியாது. ஆகவே இவ்விடயத்தில் அரசு பொறுப்புடன் செயற்படவேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.