மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு வாரத்திற்கு 6 நாள் வேலையும் நாளொன்றிற்கு 1000 ரூபாய் சம்பளத்தையும் வழங்கக் கோரி மகளீர் அபிவிருத்தி நிலையத்தினர் இன்று புதன் கிழமை முற்பகல் 11 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடாத்தியிருந்தனர்.
இப் போராட்டமானது சத்திரசந்தியில் ஆரம்பித்து யாழ் பேருந்து நிலையத்தை அடைந்து பின்னர் முனியப்பர் வீதியினூடாக வீரசிங்கம் மண்டபத்தினை வந்தடைந்தது.
‘தொழிலாளர் சம்பள நிர்ணயத்தை அரசே உன் கையிலெடு’, ‘ நல்லாட்சி அரசே தொழிலாளர் கோரிக்கைகளுக்கு மதிப்பளி’, ‘ முதலாளிமாரின் சம்மேளனமே கூட்டு ஒப்பந்தத்தை கைவிடு’, ‘ பெண் உழைப்பாளிகளின் வலி உனக்கு தெரியவில்லையா?’, ‘ அந்நிய செலவாணியை அள்ளித்தருபவர்களுக்கு குறைந்த ஊதியமா?’ போன்ற கோஷங்களை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.