கிறிஸ்ட்சர்ச் மசூதி தாக்குதலுக்கும் இலங்கை தாக்குதலுக்கும் தொடர்பில்லை – நியூசிலாந்து

266 0

கிறிஸ்ட்சர்ச் மசூதி தாக்குதலுக்கும் இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்களுக்கும் தொடர்பிருப்பதாக எவ்வித புலனாய்வு தகவல்களும் வெளியாகவில்லை என நியூசிலாந்து தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமது அரசாங்கத்திற்கு எவ்வித புலனாய்வு தகவல்களும் வெளியாகவில்லை என நியூசிலாந்து பிரதமர் ஜெஸின்டா ஆர்டொன் இன்று அறிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி இரு மசூதிகள் தாக்கப்பட்டன. இதற்கு பதிலடி வழங்கும் வகையிலேயே இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் தாக்கப்பட்டதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்திருந்தார்.

இராஜாங்க அமைச்சரின் கருத்திற்கு பதிலளிக்கும் வகையிலேயே நியூசிலாந்து பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கை அமைச்சர் குறிப்பிட்டுள்ளமையை உறுதிபடுத்தும் வகையிலான உத்தியோகப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், இலங்கையின் விசாரணைகள் தற்போது ஆரம்பக்கட்டத்திலேயே உள்ளது என்பதை தான் புரிந்துகொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் இதுவரையில் 359 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.