யாழில். நைஜீரியா பிரஜைகள் இருவர் உட்பட ஒன்பது பேரை யாழ்ப்பாண பொலிசார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
யாழ். நகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கி இருந்தவர்களை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதில் இன்றைய தினம் நைஜீரியா நாட்டு பிரஜைகள் இருவர் உட்பட ஒன்பது பேரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து அவர்களிடம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , அவர்களின் ஆவணங்களையும் பரிசோதித்து வருகின்றனர்.
விசாரணைகளின் ஊடாக அவர்களின் ஆவணங்கள் உறுதிப்படுத்தப்பட்டு அவர்கள் மீது சந்தேகம் இல்லை என்பது உறுதியானால் அவர்களை விடுதலை செய்வோம் எனவும் , சந்தேகம் இருப்பின் அவர்களை நாளைய தினம் நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை நேற்றைய தினம் யாழ்.ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ள நபர் மீது சந்தேகம் உள்ளதாக அயலவர்கள் பொலிசாருக்கு அறிவித்ததை அடுத்து இரவு அவ்வீட்டை சுற்றி வளைத்த பொலிசார் வீட்டில் தேடுதல் நடத்தியதுடன் , வீட்டில் இருந்தவரையும் விசராணைக்கு உட்படுத்தி இருந்தனர்.
இருந்த போதிலும் சந்தேகத்திற்கு இடமான முறையில் எவையும் இல்லை என்பதனை பொலிசார் உறுதிப்படுத்திய பின்னர் அங்கிருந்து பொலிசார் சென்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.