காங்கிரசுக்கு ஓட்டு போட்டால் தாமரையில் விளக்கு எரிந்ததாக புகார்

267 0

கேரள வாக்குப்பதிவில் காங்கிரசுக்கு ஓட்டு போட்டால் தாமரை சின்னத்திற்கு விளக்கு எரிந்ததால் வாக்குச்சாவடி மையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலத்தின் 20 பாராளுமன்றத் தொகுதிகளிலும் இன்று வாக்குப் பதிவு தொடங்கியது. திருவனந்தபுரம் தொகுதிக்கு உட்பட்ட கோவளம் சொவ்வரா வாக்குச் சாவடியில் 151-வது பூத்தில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது.

முதலில் சுமார் 76 பேர் ஓட்டு போட்டனர். 77-வது நபர் காங்கிரசின் கை சின்னத்துக்கு வாக்களித்த போது தாமரை சின்னத்திற்கு அருகில் உள்ள விளக்கு ஒளிர்ந்ததாக குற்றம் சாட்டினார்.

இதை கண்டித்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து 151-வது பூத்தில் மட்டும் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான கே.வாசுகி இந்த வாக்குச் சாவடிக்கு வருகை தந்தார்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறு நடந்ததா என்பதை பரிசோதித்து பார்ப்பது இப்போது இயலாத காரியம் என்பதால் வேறு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் மக்கள் வாக்களித்தனர்.