இலங்கை குண்டு வெடிப்பில் 310 பேர் பலி: ஐ.எஸ். தற்கொலை படையைச் சேர்ந்த 3 பேர் படம் வெளியீடு

331 0

இலங்கையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 3 பேரின் படம் வெளியிடப்பட்டுள்ளது. 

இலங்கையில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து 8 இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன.

3 தேவாலயங்கள், 3 சொகுசு நட்சத்திர ஓட்டல்கள் இந்த தொடர் குண்டு வெடிப்பில் சிக்கி தகர்க்கப்பட்டன.

நேற்றும் வேன் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்று வெடித்தது. விமான நிலையம் அருகே 6 அடி நீளம் உள்ள பைப் வெடி குண்டு கண்டுபிடிக்கப்பட்டு இலங்கை விமானப்படை வீரர்களால் செயல் இழக்க செய்யப்பட்டது.

இலங்கையை உலுக்கிய இந்த தொடர் குண்டு வெடிப்புகளில் பலியானவர்களின் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது. 500-க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் சுமார் 100 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

இலங்கையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் தெற்கு ஆசிய நாடுகள் இதுவரை சந்தித்திராத மிக கொடூரமான பயங்கர தாக்குதல் ஆகும். இப்படி ஒரு தாக்குதல் நடைபெற போவதாக இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் இலங்கையை எச்சரித்து இருந்தன.

ஆனால் இலங்கை அரசியல்வாதிகளும், போலீஸ் உயர் அதிகாரிகளும் உளவுத் துறை தகவல்களை மிக மிக அலட்சியமாக எடுத்துக் கொண்டனர். அதனால் இன்று மிகப்பெரிய விலையை கொடுத்துள்ளனர். இந்த தாக்குதலின் பின்னணியில் இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அந்நாட்டின் அமைச்சர்கள் அனைவரும் தெரிவித்துள்ளனர்.

தொடர் குண்டு வெடிப்புகளில் சம்பந்தப்பட்ட 30 பேரை இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் தீவிர உறுப்பினர் ஆவார்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சர்வதேச அளவில் சதிவலை பின்னப்பட்டு இந்த தாக்குதல் நடந்து இருப்பதாக தெரிய தொடங்கி இருக்கிறது.

நியூசிலாந்து நாட்டில் கடந்த மார்ச் மாதம் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பழிவாங்கவே இந்த தாக்குதலை தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கம் நடத்தியதாக கருதப்படுகிறது. ஆனால் அந்த இயக்கத்துக்கு மிகப்பெரிய தாக்குதல்கள் நடத்தும் அளவுக்கு தொழில் நுட்ப மற்றும் ஆள் பலம் இல்லை என்று கூறப்படுகிறது.

என்றாலும் தாக்குதலுக்கு தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் உறுப்பினர்கள் தான் அனைத்து உதவிகளையும் செய்து இருக்கிறார்கள் என்பது உறுதியாகி இருக்கிறது. வெடிகுண்டுகளை தயாரிப்பது, அவற்றை எடுத்துச் செல்வது போன்ற வேலைகளை அந்த இயக்கம் ஒருங்கிணைத்து செய்து கொடுத்துள்ளது.

தாக்குதலை திட்டமிட்டு நடத்தியது ஐ.எஸ். பயங்கரவாதிகள் என்று தெரிய வந்துள்ளது. நேற்று ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவு டெலிகிராம் சேனல் ஒன்றில் மூன்று தற்கொலைப் படை பயங்கரவாதிகளின் படம் வெளியிடப்பட்டது.

அந்த படங்களில் அபு உபைதா, அப்துல்பாரா, அப்துல் முக்தர் ஆகிய 3 ஐ.எஸ். பயங்கரவாதிகள் உள்ளனர். அவர்கள் ஐ.எஸ். கொடிகளை பிடித்தப்படி நிற்கிறார்கள். இவர்கள் மூவரும் கொழும்பில் தாக்குதல் நடத்திய தற்கொலை படையில் இடம் பெற்று இருந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இலங்கையில் ஞாயிற்றுக் கிழமை நடந்த 8 குண்டு வெடிப்புகளில் 7 இடங்களில் மனித வெடிகுண்டு மூலம் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த 7 தற்கொலை பயங்கரவாதிகளும் கடந்த 3 மாதங்களாக கொழும்பில் தங்கி இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தற்கொலை தாக்குதலுக்கு வெளிநாட்டிலும், கொழும்பு புறநகரிலும் பயிற்சி பெற்றதாக தெரிய வந்துள்ளது.

இவர்களில் எத்தனை பேர் இலங்கைவாசிகள், எத்தனைபேர் வெளிநாட்டு பயங்கரவாதிகள் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்பட வில்லை. இது தொடர்பாக இலங்கை ராணுவத்தினர் தீவிர விசாரணை மேற் கொண்டுள்ளனர். இதற்காக சர்வதேச அளவில் பல்வேறு நாட்டு உளவுத்துறையின் ஒத்துழைப்பை இலங்கை நாடு கேட்டுள்ளது.

முதல் கட்ட விசாரணையில் தற்கொலை பயங்கரவாதிகள் இலங்கையைச் சேர்ந்த நடுத்தர வகுப்பு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இந்த தகவலை இலங்கை உள்துறை மந்திரி ஆலவதுவாலா உறுதிப்படுத்தி உள்ளார்.

அவர் கூறுகையில், “தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரும் இளைஞர்கள். அனைவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் தான். இவர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு புறநகரில் சாதாரண வீடுகளில் வசித்து வந்தவர்கள்.

இவர்களை பயங்கரவாதிகள் மூளை சலவை செய்து அழைத்து சென்றுள்ளனர். வெளிநாடுகளில் இவர்களுக்கு தற்கொலை பயிற்சி அளித்து இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்” என்றார்.

நியூசிலாந்து நாட்டில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு நிச்சயம் பழிக்கு பழி வாங்க வேண்டும் என்று ஐ.எஸ். பயங்கரவாதிகள் தமது ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதற்காக பெரிய அளவில் உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அறிவித்து இருந்தனர்.

அந்த அடிப்படையில் தான் இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நடந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டுள்ள விதம் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்வதாக இருக்கிறது.

இலங்கை தேவாலயங்களிலும், நட்சத்திர ஓட்டல்களிலும் தற்கொலை பயங்கரவாதிகள் பயன்படுத்திய வெடி குண்டுகள் அனைத்தும் மிக மிக சக்தி வாய்ந்தவையாகும். அவை அனைத்தும் ஆர்.டி.எக்ஸ்சால் தயாரிக்கப்பட்டவை. இதனால்தான் அதிகளவு உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த குண்டு தயாரிக்கப்பட்ட விதமும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தொடர்பை உறுதிப்படுத்துவதாக உளவுத் துறையினர் கருதுகிறார்கள். மாலத்தீவில் உள்ள தங்களது பயங்கரவாத ஆதரவாளர்கள் மூலம் இலங்கைக்குள் ஊடுருவி அவர்கள் கைவரிசை காட்டி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கிடையே இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் இ தொய்பா அமைப்பும் உதவிகள் செய்து இருப்பதாக இந்தியா கூறி உள்ளது. இது தொடர்பாக இந்தியா சார்பில் இலங்கைக்கு பல்வேறு ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் செயல்பட்டு வரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினருடன் லஷ்கர் இ தொய்பா பங்கரவாதிகள் சில மாதங்களுக்கு முன்பு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி இருந்தனர். தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்களை அவர்கள் பாகிஸ்தானுக்கு அழைத்து ஆயுத பயிற்சி கொடுத்ததாக தெரிய வந்துள்ளது.

இதன் மூலம் இலங்கையில் காலூன்ற லஷ்கர் இ தொய்பா இயக்கம் தீவிரமாகி இருப்பது தெரிய வந்துள்ளது. இதை தொடக்கத்திலேயே கிள்ளி எறியும்படி இந்தியா கூறி உள்ளது.

ஆனால் இலங்கை ராணுவத்தினர் இந்த வி‌ஷயத்தில் அலட்சியமாக இருந்தனர். இந்த அலட்சியத்தை பயன்படுத்தி பயங்கரவாதிகள் பெரிய கைவரிசை காட்டி விட்டனர்.

இந்த நிலையில் இலங்கையில் மீண்டும் மிகப்பெரிய குண்டு வெடிப்பை நடத்த ஐ.எஸ். பயங்கரவாதிகள், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் ஒருங்கிணைந்து திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதனால் இலங்கையில் ஒருவித பதட்ட நிலை நிலவுகிறது.

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, டென்மார்க், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, சீனா, சுவிட்சர்லாந்து, ஆலந்து, ஜப்பான், போர்ச்சுக்கல் உள்பட 12 நாடுகளைச் சேர்ந்த 40 பேர் பலியாகி உள்ளனர். இதை கருத்தில் கொண்டு இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா தனது நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

தொடர் குண்டு வெடிப்புகளில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று இலங்கை முழுவதும் இரங்கல் கூட்டங்கள் நடைபெற்றன.