தரம் மூன்று அதிபர்களுக்கான போட்டி பரீட்சையில் சித்தியடைந்து விட்டு பாடசாலையில் ஆசிரியர்களாகவும்இ பணியாளர்களாகவும் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றோமென அதிபர் சங்கப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்ற இலங்கை தமிழ் ஆசிரியர் சங்க கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், போட்டி பரீட்சைகளில் சித்தியடைந்த 398 புதிய அதிபர்களுக்கும் நியமனம் வழங்கப்படுகின்ற திகதி ஓரே திகதியாக இருக்க வேண்டும். சென்ற வாரம் வழங்கப்பட்ட 90 நியமனங்களும் சட்ட வலுவற்றது. மத்திய கல்வி அமைச்சு அதனை அனுமதிக்கவில்லை. 90 பேருக்கு மட்டுமான அதிபர் நியமனம் எங்களுக்குள் முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளது. நிர்வாகத்துடன் சண்டை பிடிக்க வேண்டியுள்ளது.
தரம் மூன்று அதிபர்களுக்கான போட்டி பரீட்சையில் சித்தியடைந்து விட்டு பாடசாலையில் ஆசிரியர்களாகவும், பணியாளர்களாகவும் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றோம். இதனால் பல இன்னல்களை எதிர்நோக்கின்றோம். எமக்கு சம்பளம் வழங்கப்படவில்லை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளமே எமக்கு வழங்கப்படுகின்றது. எங்கள் நியமனத் திகதிகள் ஓரே நேரத்திலிருக்கவேண்டும். பொறுப்பேற்கும் திகதியும் கூட ஓரே திகதியாக இருக்க வேண்டும்.
எங்களுடைய நியமனங்கள் காலதாமதமானதற்கு மத்திய கல்வி அமைச்சு எவ்விதமான அறிக்கைகளையும் வெளியிடவில்லை. யாழ் மாவட்டத்திலிருக்கின்ற வெற்றிடங்கள் நிரப்பப்பட்டதன் பின்னரே வெளி மாட்ட பாடசாலைகள் வழங்கப்பட வேண்டும். போட்டி பரீட்சையில் சித்தி பெற்ற அதிபர்கள் சிலர் யாழ் மாவட்ட பாடசாலைகளில் பிரதி அதிபர்களாகவும் உதவி அதிபர்களாகவும் கடமையாற்ற ஆர்வத்தோடு உள்ளனர்.
எம்மிடமுள்ள பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்காக நாங்கள் ஒரு குழுவாக செயற்பட்டு வருகின்றோம். எமது பிரச்சினைளை வேறு யாரிடமும் கையளிக்க விரும்பாது நாமே கையாளுகின்றோம் சாதகமான பதில் கிடைக்கும் வரை தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் தெரிவித்தார்.