இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய ஒரு குண்டுதாரி ஏற்கனவே கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர் என அமைச்சர் கபீர் ஹாசீம் குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ஈஸ்டர் ஞாயிறன்று கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் சுமார் 295 பேர் வரையில் கொல்லப்ட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் மாவனெல்ல பகுதியில் பௌத்த சிலைகள் மீது தாக்குதல் நடத்திய இயக்கமொன்றைச் சேர்ந்த நபர்களை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
அதன் போது உயர் அரசியல் தரப்பின் அழுத்தங்கள் காரணமாக விடுதலை செய்யப்பட்ட ஒருவரும் தற்கொலைதாரியாக தாக்குதலில் பங்கேற்றிருந்தார் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அரசியல் அழுத்தங்கள் காரணமாக குறித்த தற்கொலை குண்டுதாரி விடுவிக்கப்பட்டார் என்பது பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதனை விசாரணை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.