சிகிச்சைக்காக விஜயகாந்த் மீண்டும் அமெரிக்கா போகிறார்!

320 0

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா செல்கிறார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் அமெரிக்காவில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார். கடந்த பிப்ரவரி 16-ந்தேதி சென்னை திரும்பிய விஜயகாந்த் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார்.

இதற்கிடையில் பாராளுமன்ற தேர்தல் வந்ததால் கூட்டணி தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் அவரை வீட்டில் சந்தித்து பேசினார்கள். அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணியில் விஜயகாந்த் இணைந்தார்.

இந்த கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. விஜயகாந்த்துக்கு பேசுவதில் சிரமம் ஏற்பட்டது. அவருக்கு பேச்சு பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவே பிரேமலதா விஜயகாந்த் அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டார்.

கடைசி கட்டத்தில் சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் விஜயகாந்த் வேனில் இருந்தபடியே ஓரிரு நிமிடங்கள் மெதுவாக பேசி சென்றார்.

இந்த நிலையில் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா செல்கிறார். பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும் அமெரிக்கா செல்ல திட்டமிட்டு இருந்தனர்.

இப்போது 4 தொகுதிகள் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதிகளில் பிரசாரத்துக்கு செல்ல வேண்டியிருப்பதால் அமெரிக்கா செல்வதை தள்ளிப் போடலாமா அல்லது பிரசாரத்தை தவிர்க்கலாமா என்று பிரேமலதா ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.