தலைமை தேர்தல் கமி‌ஷனில் அ.ம.மு.க.வை கட்சியாக தினகரன் பதிவு செய்தார்

357 0

டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் அ.ம.மு.க. வை கட்சியாக டிடிவி தினகரன் பதிவு செய்தார். 

அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட டி.டி.வி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை நடத்தி வருகிறார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அக்கட்சியின் பொதுச்செயலாளரான சசிகலா, சிறை செல்ல நேர்ந்ததால் தினகரன் அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளரானார். ஆனால் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் ஒன்றாக கைகோர்த்துக் கொண்டு அ.தி.மு.க.வை கைப்பற்றியதால் தினகரனால் அதில் நீடிக்க முடிய வில்லை.

அ.தி.மு.க.வில் அதிருப்தியில் இருந்தவர்களையெல்லாம் ஒன்று திரட்டி ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு தினகரன் வெற்றி பெற்றார். அந்த வேகத்தில்தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை அவர் தொடங்கினார்.

அந்த கட்சியில் துணை பொதுச்செயலாளராக இருந்து வந்த தினகரன், உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் தங்கள் பக்கமே இருக்கிறார்கள் என்று தொடர்ந்து கூறிவந்தார். அ.தி.மு.க.வை கைப்பற்றும் நோக்கத்திலேயே அவர் இது போன்று செயல்பட்டு வருவதாக கணிக்கப்பட்டது.

இந்த நிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் ஒரே சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் தினகரன் கோரினார். ஆனால் அவரது கட்சி பதிவு செய்யப்படாமல் இருப்பதாகவும், எனவே ஒரே சின்னத்தை ஒதுக்க முடியாது என்றும் கூறி தேர்தல் ஆணையம் கைவிரித்தது.

சுப்ரீம் கோர்ட்டு தலையிட்ட பின்னரே தினகரன் கட்சி வேட்பாளர்களுக்கு ஒரே சின்னம் கிடைத்தது. பரிசு பெட்டி சின்னத்தில் அனைவரும் போட்டியிட்டனர்.

இந்த நிலையில் தினகரன் அ.ம.மு.க.வை கட்சியாக பதிவு செய்ய முடிவு செய்தார். இதற்கு வசதியாக அ.ம.மு.க. பொதுச்செயலாளராக தினகரன் தேர்வு செய்யப்பட்டார். இதனைதொடர்ந்து இன்று டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் அ.ம.மு.க. கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அக்கட்சியின் வக்கீல் செந்தூர் பாண்டியன் இதற்கான ஆவணங்களை தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் வழங்கினார். பின்னர் அவர் கூறும்போது கட்சியை பதிவு செய்வதற்கு தேவையான ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ளோம் என்றார்.

அ.ம.மு.க. கட்சிக்கு பரிசு பெட்டகம் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றும் தேர்தல் கமி‌ஷனில் மனு அளிக்கப்பட்டுள்ளது.