இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று மாலையில் இருந்தே சாந்தோம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிரமாக கண்காணிக்கிறார்கள். பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
எழும்பூர், அண்ணாநகர், அயனாவரம், புரசைவாக்கம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் முன்பும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
நுங்கம்பாக்கக்தில் உள்ள இலங்கை தூதரகம், ஏர் லைன்ஸ் அலுவலகம் ஆகியவற்றில் எப்போதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.
இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இந்த இரண்டு இடங்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் கலியன் மேற்பார்வையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எழும்பூரில் உள்ள புத்த மட அலுவலகத்திலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி ஆலயத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் உள்ள ராமேசுவரம், தனுஷ் கோடி ஆகிய பகுதிகளில் இந்திய கடற்படை, கடலோர காவல்படையினர் 24 மணி நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையில் இருந்து பயங்கரவாதிகள் பாக்ஜல சந்தி, மன்னார் வளைகுடா வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவாமல் தடுப்பதற்காக இந்திய கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டரிலும் ரோந்து சுற்றி வருகின்றனர்.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடமைகள் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது.
ராமேசுவரம் ரெயில் நிலையம், பஸ் நிலையம் பாம்பன் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். மாநிலம் முழுவதும் தேவாலயங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.