நாட்டில் மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் இடம்பெற்ற வெடிப்பு சம்பங்கள் குறித்து புலனாய்வு பிரிவினால் முன்னரே அறிவிக்கப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் உண்மையென்றால், அரசாங்கம் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைளை முன்னெடுக்காமை மோசமானதொரு செயலாகும் என ஜே.வி.பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவிக்கையில்,
இலங்கை வரலாற்றில் மிகவும் சோகமானதொரு சம்பமாகவே இந்த வெடிப்பு சம்பவங்கள் காணப்படுகின்றன.
கத்தோலிக்க மதத்தவர்களுக்கு முக்கிய தினமான உயிர்த்த ஞாயிறு தினத்தன்று அவர்கள் வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது சிறிதும் இரக்கமற்ற காட்டுமிராண்டித்தனமானதொரு செயலாகும்.
அரசு என்ற ரீதியில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் அடிப்படை உரிமையை பாதுகாத்தல் என்பன அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும்.
அதே வேளை அரச அதிகாரிகளால் வழங்கப்படுகின்ற தகவல்களுக்கு உரிய பதிலளிக்க வேண்டிய கடமையும் அரச தலைவர்களுக்கு உள்ளது.
எனினும் அந்த இபொறுப்பு நிறைவேற்றப்படவில்லை. அவ்வாறு பொறுப்புடன் செயற்பட்டிருந்தால் இந்த பாரிய அனர்த்தத்திற்கு முகங்கொடுக்க நேர்ந்திருக்காது என்றார்.