கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான வவுனியா இளைஞனின் இறுதி கிரிகைகள் இன்று (22) இடம்பெற்றிருந்தது.
வவுனியா பட்டானிச்சூரை சேர்ந்த நிசாட் முகமட் நலிர் என்ற இளைஞன் கொழும்பில் ஹோட்டல் முகாமைத்துவ கற்கையை தொடர்ந்திருந்த நிலையில் சினமன் கிரான்ட் ஹோட்டலில் தொழிற்பயிற்சியின் நிமிர்த்தம் கடமையில் ஈடுபட்டிருந்தார்.
இதன் போதே நேற்றையதினம் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஸ்தலத்திலேயே பலியாகியிருந்த அவரது சடலம் உறவினர்களால் பொறுப்பேற்கப்பட்டு இன்று காலை வவுனியாவிற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை 11.00 மணியளவில் அவரது பட்டானிச்சூர் இல்லத்தில் இஸ்லாமிய முறைப்படியான சடங்குகள் இடம்பெற்று பட்டானிச்சூர் மையவாடியில் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை வவுனியா அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா மற்றும் மேலதிக அரசாங்க அதிபர், வவுனியா பிரதேச செயலாளர் மரண வீட்டிற்கு சென்று அரசினால் வழங்கப்படுகின்ற ஒரு இலட்சம் ரூபாவில் முற்பணமாக அறுபதாயிரம் ரூபாயை உயிரிழந்த இளைஞனின் தந்தையிடம் வழங்கி வைத்திருந்தனர்.
குறித்த இளைஞனின் இறுதிக்கிரியையில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் , முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரிப்கான் பதியூதின் , வவுனியா நகரசபை உபநகரபிதா சு.குமாரசாமி , நகரசபை உறுப்பினர்கள், பொலிஸார் , கிராமசேவையாளர் , இளைஞர்கள் , பொதுமக்கள் , வர்த்தகர்கள் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.