இலங்கை தாக்குதல் மிகவும் அருவறுக்கத்தக்க செயல் -பிரித்தானியா

377 0

இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்கள் மிகவும் அருவறுக்கத்தக்க செயலென பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹெரமி ஹண்ட் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நேற்று நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்களில் சுமார் 240இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஜெரமி ஹண்ட், இலங்கை வெளிவிவகார அமைச்சரை தொடர்புகொண்டு நிலைமையை கேட்டறியவுள்ளதாக கூறியுள்ளார்.

அத்தோடு, இலங்கைக்கு உதவுவதற்கு தயாராக உள்ளதாகவும் ஹண்ட் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பின் நிலைமைகள் தொடர்பாக அங்குள்ள தூதரகம் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக குறிப்பிட்ட ஹண்ட், gov.uk என்ற இணையதளத்தில் அவசர தொடர்பு வசதி காணப்படுவதாக அறிவித்துள்ளார். இலங்கையில் தமது அன்புக்குறியவர்கள் யாரேனும் விடுமுறையை கழிக்கச் சென்றிருந்தால் அவர்கள் தொடர்பாக அறிந்துகொள்ள இந்த அவசர தொடர்பு சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, உலகளாவிய ரீதியில் கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் தாக்குதல்கள் அதிகரித்துச் செல்வதாக ஹெரமி ஹண்ட் இதன்போது சுட்டிக்காட்டினார். கடந்த வருடத்தில் மாத்திரம் 3000 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதென அவர் குறிப்பிட்டார். இந்நிலையில், உலகளாவிய ரீதியில் கிறிஸ்தவ மக்களின் உரிமைகளை காக்க முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயவுள்ளதாகவும் ஹெரமி ஹண்ட் மேலும் தெரிவித்தார்.