கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 228ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, 470 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வெளியான தகவலையடுத்து நடத்தப்பட்ட தேடுதலின்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு புனித அந்தோனியார் தேவாலயத்தில் நேற்று காலை நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து, நீர்கொழும்பு, மட்டக்களப்பு, தெஹிவளை மற்றும் கொழும்பின் பிரபல நட்சத்திர விடுதிகளும் இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார், நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். குறிப்பாக ஹோட்டல்கள், வணக்கஸ்தலங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்றிரவு கொழும்பு கட்டுநாயக்க விமானநிலைய நுழைவாயில் வீதியில், குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குண்டுவெடிப்பு தொடர்பான சந்தேகத்தின்பேரில் இதுவரை 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அவர்களில் 10 பேர் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.