உளவுத்துறை எச்சரிக்கையை கணக்கில் கொள்ளவில்லையா? – விசாரணைகளில் தீவிர அவதானம்

585 0

நாட்டில் இன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஏற்கனவே உளவுத்துறை பொலிஸாரையும் இராணுவத்தையும் தெளிவுபடுத்தியுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இந் நிலையில் ஏற்கனவே உளவுத்துறை கொழும்பில் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக எச்சரித்து அதனை எவரேனும் உதாசீனம் செய்தமையால் இந்த தாக்குதலை தடுக்க முடியாமல் போனதா என்பது குறித்து தற்போது விசாரணைகளை பொறுப்பேற்றுள்ள சி.ஐ.டி. சிறப்புக் குழுவினர் ஆராயவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

ஒரு அடிப்படைவாத அமைப்பொன்றின் செயலாளரையும் அதன் தலைவரையும் குறிப்பிட்டு, அவர் கொழும்பில் தற்கொலை தாக்குதல்களை நடத்தப்போவதா தேசிய உளவுத்துறை பொலிஸ் மா அதிபருக்கு கொடுத்த அறிக்கையை மையபப்டுத்தி, விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான பிரதிப் பொலிஸ் மா அதிபரை தெளிவுபடுத்தியுள்ளதாக ஆவணம் ஒன்ரு இன்று வெளியாகியது.

அத்துடன் கிழக்கு இராணுவ கட்டளைத் தளபதி, கிழக்கில் உள்ள சில குழுக்களால் கொழும்பில் தாக்குதல் நடத்தப்பட திட்டமிடப்படுவதாக கொழும்பு பாதுகாப்பு தலைமையகத்துக்கு அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. எனினும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாமை இந்த தாக்குதல்களுக்கு காரணமானதா என  தற்போது கேள்வி எழுந்துள்ளது.

இந் நிலையில் இது தொடர்பில் தன்னால் எந்த கருத்தையும் வெளியிட முடியாது என  இராணுவ பேச்சாளர் பிரிகேடியர்  சுமித் அத்தபத்து கூறினார். எனினும் இன்று வெளியான ஆவணம் போலியானதா இல்லையா என கூற முடியாது என தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் அது தொடர்பில் சி.ஐ.டி. விசாரணையில் அவதானம் செலுத்தப்ப்ட்டுள்ளதாக கூறினார்.

எனினும் அந்த ஆவணத்தை ஒத்த ஒரு ஆவணம், இவ்வாரு தாக்குதல் நடத்தப்போகிறது என்பதை வெளிப்படுத்தி உளவுத் துறையினரால் வழங்கப்பட்டதை பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஒப்புக்கொண்டார் 

இதேநேரம் இது குறித்து பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன கூருகையில், உளவுத் துறை இந்த தாக்குதல் குறித்து முன்பே வந்த தகவல்களில் ஒருவரின் பெயரை குறிப்பிடப்பட்டு இருந்தது. அவரின் பெயரும், ஷாங்ரி லா நட்சத்திர விடுதியில் இறந்தவரின் பெயரும் ஒன்றாக உள்ளது என தெரிவித்தார்.