இரணைதீவு மக்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

386 0

human-rights-commission-of-sri-lanka2கிளிநொச்சி இரணைதீவில் வாழ அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இரணைதீவு கிராம மக்கள் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளனர்.

யுத்தம் நிறைவடைந்து ஏழரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், ஸ்ரீலங்கா இராணுவத்தினரினதும் கடற்படையினரினதும் கெடுபிடிகளுக்கு தாம் தொடர்ந்தும் முகம்கொடுத்துள்ளதாக இரணைதீவு கிராம மக்கள் இதன்போது கவலை வெளியிட்டுள்ளார்.

யுத்தம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட இரணைதீவு கிராமத்திலிருந்து வெளியேறி கடந்த 24 வருடங்களாக அகதிகளாக வாழ்ந்துவரும் இரணைதீவு மக்கள், கடற்தொழில் கிராமமான தமது கிராமத்தில் 240ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் அங்கிருந்து முற்றாக வெளியேற்றப்பட்டிருந்த நிலையில், யுத்தம் நிறைவுபெற்று எட்டு வருடங்கள் பூர்த்தியடைவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள போதிலும், சொந்தக் கிராமத்திற்கு மீளத் திரும்ப முடியாத நிலையில் உள்ளதாக மக்கள் தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறந்த கடல் தொழில் வளம் கொண்ட இரணைதீவு பகுதியில் கடந்த 1992 ஆம் ஆண்டு இரணைதீவின் பெரியதீவில் இருந்து 190 குடும்பங்களும் சின்னத்தீவில் 50 குடும்பங்களுமாக 240 குடும்பங்கள் வெளியேறியிருந்தன.

பூர்வீகமாக வாழ்ந்த வாழ்விடங்களையும், வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்பட்ட கால்நடைகள், கடற்தொழில் உபகரணங்கள் என்பவற்றையும் கைவிட்ட நிலையில், வெளியேற்றப்பட்ட இந்த மக்கள், முழங்காவில் பிரதேசத்தில் தங்கவைக்கப்பட்டு, இரணைமாதாநகர் என்ற கிராமம் உருவாக்கப்பட்டு கடந்த 24 வருடங்களாக அங்கு வாழ்ந்து வருகின்றனர்.

இரணைதீவு மக்கள் இரணைமாதா நகரில் குடியேற்றப்பட்டு, அந்த மக்களுக்கான வீட்டுத் திட்டங்கள், மின்சார வசதி மற்றும் இரணைதீவு றோமன் கத்தோலிக்க வித்தியாலயமும் இரணைமாதா நகரில் தற்காலிகமாக இயங்கி வருகின்றன.

இவ்வாறான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டாலும், தமது பூர்வீக நிலமான இரணைதீவிற்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என இரணைதீவு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கடல் வளங்கள் செறிந்து காணப்படும் முத்துக் கொழிக்கும் வளம் கொண்ட இரணைதீவில் தமக்கு வாழ அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே தாங்கள் குறித்த முறைப்பாட்டை பதிவு செய்ததாகவும் அம்மக்கள் குறிப்பிட்டனர்.