பாசிக்குடாவில் அமைக்கப்பட்டுள்ள அனைத்துச் சுற்றுலா விடுதிகளும் இராணுவத்தினர் வசம்!

327 0

pakd1-300x225மட்டக்களப்பு மாவட்டம் பாசிக்குடா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான சுற்றுலா விடுதிகளை இராணுவத்தினரும் சிறீலங்கா அரசபடையினருமே நடாத்தி வருவதாக பாசிக்குடா மீனர்வகள் தொடர்பான பிரச்சனைகளை ஆராய்ந்து அறிக்கையொன்றைத் தயாரித்துள்ள தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் சுயாதீன அறிக்கையாளர் வூவி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாசிக்குடா கடலில் காலம் காலமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் தமிழ் மீனவர்களை வெளியேறுமாறு தொடர்ந்து அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுவருவதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பாசிக்குடா நந்தவனம் விடுதியில் மீனவர்களின் காணி உரிமை மற்றும் மனித உரிமைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

இப்பிரச்சனை தொடர்பாக நேரில் ஆராய்ந்த சுவிஸ் நாட்டு செயற்பாட்டாளரான வூவி இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில்,

எந்தவொரு கலந்துரையாடலும் நடத்தப்படாமல் மக்களுடைய காணிகள் சூறையாடப்படும் அதேவேளை பாசிக்குடாவில் ஸ்ரீலங்கா அரச படையினரே அதிகளவிலான சுற்றுலா விடுதிகளை நடத்துவதாகவும் குறிப்பிட்ட அவர், சுற்றுலாத்துறையினால் சாதாரண மக்களுக்கு எந்தவிதமான பலனும் கிடைப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாசிக்குடா மீனவர் பிரச்சனைகள் குறித்த அறிக்கையாளர் தெரிவிக்கையில், சுற்றுலாத்துறைக்காக அதிக காணிகள் சூறையாடப்பட்டுள்ளன. இதனால் சிறிய அளவில் மீன்பிடியில் ஈடுபட்டுவரும் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை இந்த சுற்றுலாத்துறை அபிவிருத்தியால் சாதாரண மக்களுக்கும் எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை. சாதாரண மக்களின் காணி உரிமை மீறப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை அபிவிருத்தி என்பது மக்களின் நலனை கருத்தில் கொண்டு அமைய வேண்டும். ஆனால், பாசிக்குடாவில் எதிர்மாறாக இருக்கின்றது. இந்த மீனவர்களின் மனித உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

ஆகவே இவர்களது காணிகள் தொடர்பாக வெளிநாடுகளிலும் பேசியுள்ளேன். இந்த நிலை தொடருமானால் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் பாசிக்குடாவுக்கு செல்வதை தடைசெய்ய நேரிடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.