தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் உரிய உத்தரவாதத்தை வழங்குவோருக்கே நாம் ஆதரவளிப்போமென முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் குறித்து தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே சி.வி.விக்னேஸ்வரன் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழரின் நீண்டகால பிரச்சினையை தீர்ப்பதற்கு மத்தியஸ்தர் ஒருவரின் ஊடாக உத்தரவாதம் அளித்தால் மாத்திரமே ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து சிந்திக்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்க கூடாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஜனாதிபதி தேர்தல் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் பெரும்பாலான கட்சிகள் அத்தேர்தல் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.