நேபாளத்தில் நின்றுகொண்டிருந்த ஹெலிகாப்டர்கள் மீது விமானம் மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
நேபாள நாட்டின் சொலுகும்பு மாவட்டத்தில் உள்ள லுக்லா என்ற இடத்தில் தரையில் இருந்து 9,334 அடி உயரத்தில் டென்சிங் ஹலாரி விமான நிலையம் உள்ளது. குறுகிய ஓடுபாதையை கொண்டிருப்பதால், இது உலகின் மிகவும் ஆபத்தான விமான நிலையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இங்கு, ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய ரக விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இந்த விமான நிலையம் இமயமலையின் நுழைவாயில் என்று அழைக்கப்படுகிறது.
புறப்பட தயாரானது
இங்கு இயக்கப்படும் விமானங்களின் மூலம் சுற்றுலாப் பயணிகள் இமயமலையின் அழகை பார்த்து ரசிக்கிறார்கள்.
இதனால் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் உள்பட ஏராளமானோர் இந்த விமான நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில், நேற்று காலை இந்த விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று, தலைநகர் காட்மாண்டுவுக்கு புறப்பட தயாரானது.
3 பேர் பலி
இதில் விமானி, விமானப் பணிப்பெண் ஒருவர் மற்றும் 4 பயணிகள் இருந்தனர். ஓடுபாதையில் இருந்து புறப்பட தொடங்கியபோது திடீரென நிலைதடுமாறிய விமானம் தறிகெட்டு ஓடியது.
பின்னர் அந்த விமானம் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 2 ஹெலிகாப்டர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் விமானமும், ஹெலிகாப்டர்களும் பலத்த சேதம் அடைந்தன. இந்த கோரவிபத்தில் விமானத்தில் இருந்த விமானி மற்றும் ஹெலிகாப்டர்களுக்கு அருகே நின்று பேசிக்கொண்டிருந்த 2 போலீஸ் அதிகாரிகள் என 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
5 படுகாயம்
மேலும் விமானத்தில் இருந்த 4 பயணிகளும், விமான பணிப்பெண்ணும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஹெலிகாப்டர்கள் மூலம் காட்மாண்டுவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் உயிர் இழந்த 3 பேரும் நேபாளத்தை சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சுற்றுலா மந்திரி
நேபாளத்தில் கடந்த மாதம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் சுற்றுலா மந்திரி உள்பட 7 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
அதே போல், கடந்த ஆண்டு மார்ச் மாதம் தலைநகர் காட்மாண்டுவில் தரையிறங்கியபோது, ஒரு விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில் வங்காளதேசத்தை சேர்ந்த 23 பேர் உள்பட 50 பேர் உயிர் இழந்தனர் என்பதும் நினைவுகூரத்தக்கது.