ஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசவில்லை என்றும், அப்படி பேசியதாக நிரூபித்தால் தேர்தலில் இருந்து விலக தயாராக இருப்பதாகவும் ஆசம் கான் விளக்கம் அளித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கானை எதிர்த்து, பாஜக சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுகிறார். சமீபத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் ஆசம் கான் பேசும்போது, ஜெயப்பிரதா குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பொதுக்கூட்டத்தில் ஜெயப்பிரதா பெயரை நேரடியாக குறிப்பிடாமல் பேசிய ஆசம் கான், “இங்கு 10 வருடங்கள் ஒருவர் மக்கள் பிரதிநிதியாக இருந்தார். ராம்பூர் மக்கள், உத்தர பிரதேச மக்கள் மற்றும் இந்திய மக்கள் அவரை புரிந்துகொள்ள 17 ஆண்டுகள் ஆனது. ஆனால், அவர் காக்கி உள்ளாடை அணிந்திருப்பதை 17 நாட்களில் அறிந்துகொண்டேன்” என்றார்.
ஆசம் கான் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அவருக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. ஆசம் கானின் கருத்தை தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மாவும் கண்டித்துள்ளார். சர்ச்சை பேச்சு குறித்து விளக்கம் அளிக்கும்படி ஆசம் கானுக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும் கூறினார்.
இந்நிலையில் பிரசாரத்தின்போது பேசியது குறித்து ஆசம் கான் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
பாஜக வேட்பாளர் ஜெயப்பிரதா குறித்து நான் ஆட்சேபனைக்குரிய வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. நான் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு பேசவில்லை.
வேறு ஒருவரைப் பற்றி நான் பேசினேன். தன்னிடம் 150 துப்பாக்கிகள் இருப்பதாகவும், ஆசம் கானைப் பார்த்தால் சுட்டுக்கொல்வேன் என்றும் கூறிய ஒருவரின் உண்மையான முகத்தை மக்கள் அறிந்துகொண்டார்கள் என்று பேசினேன். அவர் ஆர்எஸ்எஸ் கால்சட்டை அணிந்தவர் என்பது இப்போது தெரியவந்துள்ளது. கால்சட்டை என்பது ஆண்கள் அணிவது.
நான் இந்த தொகுதியில் 9 முறை எம்எல்ஏவாக இருந்தவன். மந்திரியாகவும் பதவி வகித்துள்ளேன். என்ன பேச வேண்டும் என்பது எனக்கு தெரியும். யாருடைய பெயரையாவது நான் குறிப்பட்டு அவமதிக்கும் வகையில் பேசியதாக நிரூபித்தால், தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிவிடுவேன். ஊடகங்கள் எனது கருத்தை திரித்து கூறிவருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகை ஜெயப்பிரதா 2004 மற்றும் 2009 பொதுத்தேர்தலில் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக 2010ல் அவர் நீக்கப்பட்டார். அதன்பின்னர் சமீபத்தில் பாஜகவில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.